உற்சாகத்துடன் தொடங்கிய முதல் நாள்

குதூகலம், கலக்கம், மகிழ்ச்சி என பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக, மனத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க பள்ளியின் முதல் நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர் தொடக்கநிலை ஒன்று, இரண்டு, உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்.

எந்தவொரு புதுத் தொடக்கமும் உற்சாகத்தை அள்ளித்தரும். முதல் நாள் பள்ளிக்குச் செல்வதும் அப்படியொரு சிலிர்ப்பான அனுபவம்.

இலட்சியங்களைச் சுமந்தபடி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் ஒருபுறமிருக்க, கனவுகளோடு அவர்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி.

நார்த்ஷோர் தொடக்கப்பள்ளியில் தொடக்க நிலை ஒன்றில் சேர்ந்திருக்கும் ஹஷ்வின் ஜனார்தன் பரவசத்துடன் பள்ளிக்குச் சென்றதாகச் சொல்கின்றனர் அவனுடைய பெற்றோரான லட்சுமி - பாபு இணையர். தங்களுக்கு முந்திய நாள் இரவு சிறிது நேரம்கூட உறக்கமில்லை என்று அவர்கள் கூறினர்.

பொதுவாக, அதிகாலையில் எழும் பழக்கமில்லாத தங்கள் மகன், அதிகாலை 5.45 மணிக்கு எழுந்து கிளம்பி பள்ளிக்குச் சென்றதைச் சுட்டிக்காட்டுகிறார் தாயார் லட்சுமி.

மிகுந்த மகிழ்ச்சியுடன் புதிய சீருடை அணிந்து, தன்னைக் காண வந்திருந்த தாத்தா - பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற்று கிளம்பிச் சென்ற ஹஷ்வின், பள்ளிக்குச் செல்லும் வழியிலேயே வாகனத்தில் புதிய நண்பர்களையும் ஏற்படுத்திக் கொண்டதை பெருமையுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

பள்ளியில் கொடுக்கப்பட்ட பரிசுகளைக் கண்டு மகிழ்ந்த ‌ஹஷ்வின், நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்ததாகவும் திருவாட்டி லட்சுமி கூறினார்.

தொடக்க நிலை ஒன்றில் சேர்ந்திருக்கும் ஹஷ்வின் ஜனார்தன். படம்: லட்சுமி

செயின்ட் ஆன்டனிஸ் தொடக்கப்பள்ளியில் முதல் நாள் வகுப்புக்குச் சென்ற தயாளினி, முன்னதாகவே தனது விருப்பமான கற்பனை கதாபாத்திரமான ‘யுனிகார்ன்’ வடிவிலான புத்தகப் பை, எழுதுபொருள்களைப் பார்த்துப் பார்த்து வாங்கியதாகச் சொன்னார் அவளுடைய தந்தை கல்யாண் குமார்.

தன் மூத்த மகள் பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழி இணைந்ததால், பள்ளியின் முதல் நாள் எனும் உணர்ச்சிபூர்வமான தருணத்தை அனுபவிக்க இயலாமல் போனது என்றும், இம்முறை இளைய மகள் சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதைக் காண இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அவர் சொன்னார்.

பள்ளியில் இருந்த பலகையில் சிரிக்கும் பொம்மை வரைந்ததோடு, பள்ளியில் இருந்து வந்தவுடன் அங்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை, நாட்குறிப்பேடு என அனைத்தையும் தங்களிடம் காட்டி மகிழ்ந்தாகவும் கூறினர் கல்யாண் - சுடர்மொழி இணையர்.

தயாளினியின் பாலர் பள்ளி நண்பர்கள் சிலரும் அதே தொடக்கப்பள்ளியில் சேர்ந்தது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சொன்னார் திரு கல்யாண்.

தொடக்கப்பள்ளியில் முதல் நாள் வகுப்புக்குச் சென்ற மாணவி தயாளினி. படம்: கல்யாண் குமார்

மழலையர் பள்ளிதொட்டு ஒவ்வோர் ஆண்டும் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற தன் மகள் ஆவ்யாவின் புகைப்படங்களைப் பெருமையுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டு வரும் தாயார் பிரியங்கா, தன் மகள் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து, புத்துணர்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

பெரிய பள்ளிக்குச் சென்று புதிய நண்பர்களை சந்திக்க ஆவலாக உள்ளதாக சொல்லி கிளம்பிய ஆவ்யா, புதுப் பள்ளியில் தனது ஓவியத் திறனையும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்.

மகளுக்குத் தரமான கல்வி வழங்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பெற்றோர் பிரியங்கா - விகாஸ் குமார், தங்கள் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்புகின்றனர்.

பள்ளிவிட்டு வந்தவுடன் கவலையுடன் காத்திருந்த பெற்றோரிடம், தான் வளர்ந்த பிள்ளை என்றும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் மகள் குறிப்பிட்டதை பெருமையுடன் சொன்னார் திருவாட்டி பிரியங்கா. நண்பர்களையும், பள்ளியின் உணவுக்கூடமும் மிகவும் பிடித்ததாகவும் சொல்கிறார் சிறுமி ஆவ்யா.

ஆவ்யா. படம்: பிரியங்கா 

உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைத்த மாணவி

அவ்ரா நக்பால். படம்: ரூபாலி

தொடக்கநிலை மாணவர்கள் போலவே, பெரியவர்களாக வளர்ந்து உயர்நிலைக்கு முதல் நாள் செல்லும் மாணவர்களின் பெருமைக்கும், உற்சாகத்துக்கும் குறைவில்லை.

“சின்னஞ்சிறு குழந்தையாக என் மகள் தொடக்கநிலை ஒன்றில் அடியெடுத்து வைத்த நாள் இன்னும் என் மனத்தில் பதிந்திருக்கிறது. ஆண்டுகள் உருண்டோடி, அழகிய பெண்ணாக இன்று உயர்நிலை ஒன்றில் அடியெடுத்து வைப்பதை காண பூரிப்பாக இருக்கிறது,” என்கிறார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியில் படிக்கும் அவ்ரா நக்பாலின் தாய் ரூபாலி.

“கடவுளை வழிபட்டு, மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றிருக்கும் எங்கள் மகள் தனக்கு விருப்பமான பள்ளியைத் தேர்தெடுக்கவும், தன் கனவுகளுக்கு உயிர் கொடுக்கவும் அவளின் கடும் உழைப்பை கண்டு பெற்றோராக நாங்கள் வியந்திருக்கிறோம். தொடர்ந்து அதே உழைப்பைக் கொடுத்து வெற்றி வாகை சூடவேண்டும் என விரும்புகிறோம்,” என்கின்றனர் ஹேமந்த் - ரூபாலி இணையர்.

மும்மடங்கு மகிழ்ச்சியில் பெற்றோர்

இடமிருந்து கௌசல்யா ரிஷிப்ரியா,ஜெய் அர்ஜுனன், விஸ்வதுளசி படம்: தாயார் திலகவாணி

தங்கள் மூன்று குழந்தைகளுக்கும் முதல் நாள் பள்ளி, ஒரே நாளில் தொடங்க மும்மடங்கு பரபரப்புடன் செயல்பட்டதைப் பகிர்ந்துகொண்டனர் சிவசுப்பிரமணியன் - திலகவாணி இணையர்.

தங்கள் மகன் ஜெய் அர்ஜுனன் தொடக்கநிலை ஒன்றில் அடியெடுத்து வைக்க, மகள்கள் கௌசல்யா ரிஷிப்ரியா, விஸ்வதுளசி முறையே பாலர் பள்ளிக்கும், மழலையர் பள்ளிக்கும் முதல் நாள் சென்றனர்.

மூவரையும் தனித்தனியே தயார் செய்து அனுப்பிய காலைப் பொழுது மூச்சுவிட நேரமின்றி கழிந்ததாகச் சொல்கிறார் தாயார் திலகவாணி. மூவருக்கும் முந்திய நாள் இரவே, எதிர்வரும் புதிய பள்ளி வாழ்வு குறித்து விளக்கியதோடு, பொறுப்புடன் நடக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியதாகச் சொல்கின்றனர் அவர்களின் பெற்றோர்.

பள்ளி சென்று வந்த குழந்தைகள், பள்ளி பிடித்துள்ளதாகவும், அடுத்தடுத்த நாள்கள் பள்ளிக்குச் செல்வதை எதிர்நோக்குவதாகவும் பெருமையுடன் கூறினார் திலகவாணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!