ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பத்துக்கும் ஜனவரி 3 (புதன்கிழமை) முதல் $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
குடும்பங்களின் அன்றாடச் செலவுகளுக்கு உதவும் பொருட்டு இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
திட்டத்தில் பங்கேற்றுள்ள பேரங்காடிகளிலும் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
பற்றுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜாலான் புசார் சமூக மன்றத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்காக நிதி அமைச்சு பணியாற்றி வருவதாகவும் சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் உதவி வழங்குவதற்கான வழிகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகக் கடைசியாக வழங்கப்பட்டதைக் காட்டிலும் $200 கூடுதல் மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் இப்போது வழங்கப்படுகின்றன.
இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதைப் போல இவ்வாண்டின் பற்றுச்சீட்டின் 50 விழுக்காட்டை பேரங்காடிகளிலும் எஞ்சிய 50 விழுக்காட்டை உணவங்காடி நிலையம் மற்றும் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
ஏறத்தாழ 1.27 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் இந்தப் புதிய பற்றுச்சீட்டுகளைப் பெறும். இதன்மூலம் அரசாங்கத்துக்கு $635 மில்லியன் செலவாகும்.
தொடர்புடைய செய்திகள்
பணவீக்க சிரமங்களைக் குறைக்க அரசாங்கம் அளித்து வரும் விரிவான உதவித் திட்டங்களின் ஒரு பகுதி இந்த பற்றுச்சீட்டுகள் என்று நிதி அமைச்சருமான திரு வோங் புதன்கிழமை தெரிவித்தார்.
ஏற்கெனவே 2023 டிசம்பரில் உத்தரவாதத் தொகுப்பின்கீழ் $800 ரொக்கம் வழங்கப்பட்டதும் தகுதிபெறும் மூத்த குடிமக்களின் மெடிசேவ் கணக்குகளில் தொகை நிரப்பப்பட்டதும் இதர உதவிகளில் அடங்கும்.
இவ்வாண்டு அதிகமான பேரங்காடிகள் பற்றுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ளும். ஏழு ஏற்கெனவே பேரங்காடிகள் திட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடியும் அதில் இணைந்துள்ளது.
அங் மோ பேரங்காடி, ஜையண்ட், ஹாவோ மார்ட், ஃபேர்பிரைஸ், பிரைம், ஷெங் சியோங், யு ஸ்டார்ஸ் ஆகியன இதர ஏழு பேரங்காடிகள்.
அதேபோல, திட்டத்தில் பங்கேற்கும் குடியிருப்பு வட்டாரக் கடைகளின் எண்ணிக்கையும் 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் இருமடங்கிற்கு மேல் அதிகரித்து உள்ளன.
2021ஆம் ஆண்டு 11,000 கடைகள் திட்டத்தில் இடம்பெற்ற நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 23,000க்கு அதிகரித்துள்ளதாக திரு வோங் தெரிவித்துள்ளார்.
பற்றுச்சீட்டுகளை எவ்வாறு பெறலாம்
இதற்கு முன்னர் நடைபெற்றதைப்போல, தகுதி உள்ள குடும்பங்கள் ஜனவரி 3 முதல் அறிவிப்புக் கடிதத்தைப் பெறும். பற்றுச்சீட்டுகளை எவ்வாறு பெறலாம், எவ்வாறு செலவழிக்கலாம் என்பன போன்ற விவரங்கள் அந்தக் கடிதத்தில் இருக்கும்.
இணையம் வாயிலாக பற்றுச்சீட்டுகளைப் பெற விரும்புவோர், ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும் www.go.gov.sg/cdcv இணையத்தளத்தில் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
அதன் பிறகு விண்ணப்பதாரரின் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசிக்கு பற்றுச்சீட்டுக்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் அவர் பகிர்ந்துகொள்ளலாம்.
இவ்வாறு மின்னிலக்கமாக பற்றுச்சீட்டுகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவோர் சமூக நிலையங்கள்/மன்றங்கள் மற்றும் எஸ்ஜி மின்னிலக்க சமூக மையங்களை உதவிக்கு நாடலாம்.