அதிபர் தர்மன் சண்முகரத்தினம், அவரது மனைவி திருவாட்டி ஜேன் இட்டோகி இருவரதும் அதிகாரபூர்வ உருவப்படங்களை பள்ளிகள், அரசு கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் மாட்டுவதற்கு ஜனவரி 8 முதல் மார்ச் 1 வரை பெற்றுக்கொள்ளலாம்.
சட்டமிடப்படாத படங்கள் அமைப்புகளுக்கு கட்டணமின்றி வழங்கப்படும் என்று அதிபர் அலுவலகம் ஜனவரி 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
படங்களைப் பெற விரும்பும் அமைப்புகள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, istana_feedback@istana.gov.sg. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.
படங்களை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் படங்களை மாட்டி வைப்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு https://www.istana.gov.sg/the-president/presidents-portrait-and-insignia/portrait என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்படின், அமைப்புகள் ஒப்புதல் மின் அஞ்சலைப் பெறும்.
படங்களைப் பெற, ஒப்புதல் மின்னஞ்சல் பிரதியுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் இஸ்தானா பூங்காவில் உள்ள இஸ்தானா மரபுடைமை காட்சிக்கூடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி - நண்பகல் வரையும், பிற்பகல் 1.30 மணி - மாலை 5.30 மணி வரையும் படங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதிபர் தர்மனின் படம் இடதுபுறத்தில் இருக்குமாறு, இருவரது படங்களையும் அருகருகே மாட்ட வேண்டும் என்று இஸ்தானா இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இரு படங்களையும் ஒரே உயரத்தில் சட்டமிடப்பட்டு மாட்ட வேண்டும். வேறு படங்கள், புகைப்படங்கள், சின்னங்கள் அல்லது அறிவிப்புகள் எதுவும் இந்தப் படங்களுக்கு மேலேயோ அல்லது அருகிலோ இடம்பெறக்கூடாது.
பலதுறை மருந்தகம், மருத்துவமனைகள், வங்கிகள், ராணுவ அமைப்புகள், ஹோட்டல்கள், தூதரகங்கள். பொதுமக்கள் வழக்கமாக வருகை தரும் இடங்கள், அதிகாரத்துவ வணிகம் நடைபெறும் இடங்களில் இப்படங்களை மாட்டலாம்.
விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடைபெறும் இடங்களிலோ அல்லது உணவு, பானங்கள் பரிமாறப்படும் இடங்களிலோ இந்தப் படங்களை மாட்டக்கூடாது.

