தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான அவசரநிலை: செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

2 mins read
996c2c68-7963-4ac6-9b25-dca7e4b33c08
தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம். - படம்: ஏஎஃப்பி

ஜனவரி 2ஆம் தேதியன்று தோக்கியாவில் உள்ள ஹனேதா விமான நிலையத்தில் விமான விபத்து நிகழ்ந்தது. அதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீக்கு இரையானது.

இந்நிலையில், விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

துரிதமாகச் செயல்பட்டு பெரும் உயிர்ச் சேதத்தைத் தவிர்த்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை விமானப் போக்குவரத்து நிபுணர்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

இதற்கிடையே, விமானப் பயணத்தின்போது அவசரநிலை ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை நிபுணர்கள் பகிர்ந்துள்ளனர்.

விமானப் பயணத்தின்போது அவசரநிலை ஏற்பட்டால் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள விமானச் சிப்பந்திகள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துலக சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பு இதைக் கட்டாயமாக்கியுள்ளது.

அவசரநிலை ஏற்பட்டால் ஆகப் பெரிய பயணிகள் விமானம் உட்பட அனைத்து வகை விமானங்களிலிருந்து பயணிகள் அதிகபட்சம் 90 வினாடிகளில் வெளியேறக்கூடியதாக விமானம் இருப்பதை விமானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை ஏற்படும்போது விமானங்களிலிருந்து வெளியேற பயணிகள் தயாராகும் சில வழிமுறைகளைப் பற்றியும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

விமானக் கதவுகளை மறிக்கும் வகையில் அங்கு பயணப்பெட்டிகள் உட்பட எவ்வித பொருள்களையும் வைக்கக்கூடாது.

அவசரநிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பயணம் தொடங்குவதற்கு முன்பு விமானப் பணிப்பெண்கள் கூறுபவற்றைச் செவிமடுக்க வேண்டும்.

விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருக்கும்போது சன்னல் திரைகளைத் திறந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஓடுபாதையில் நடப்பவை குறித்து விமானத்தில் இருப்போரால் பார்க்க முடியும்.

அத்துடன் அவசரநிலை ஏற்பட்டால் மீட்புப் பணியாளர்களால் விமானத்துக்குள் எளிதில் பார்க்க முடியும்.

கடப்பிதழ், பணப்பை போன்ற முக்கிய பொருள்களைப் பயணிகள் தங்களுடன் வைத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் விமானத்திலிருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டால் அவற்றைத் தேடி நேரத்தை வீணாக்கும் நிலை ஏற்படாது.

அவசரநிலை ஏற்பட்டால் நேரம் தாழ்த்தாமல் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற வேண்டும்.

எது நடந்தாலும் பதற்றம் அடையாமல் நிதானமாக இருக்க வேண்டும்.

அவசரநிலையின்போது விமானத்திலிருந்து வெளியேறும்போது பயணப்பெட்டிகளைப் பயணிகள் தங்களுடன் தூக்கிச் செல்லக்கூடாது. அவ்வாறு செய்தால் மற்ற பயணிகளால் விமானத்திலிருந்து விரைவாக வெளியேற முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானத்திலிருந்து வெளியேற சறுக்குப் பலகையைப் பயன்படுத்தும்போது தூக்குக் காலணிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தூக்குக் காலணிகள் அந்தப் பலகையில் துளையிடக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டுச் செல்லும்போதும் தரையிறங்கும்போதும் ‘ஹெட்ஃபோன்’ போன்ற இசை கேட்பதற்காகக் காதில் பொருத்தப்படும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். அவசரநிலை ஏற்பட்டால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விமானச் சிப்பந்திகள் கூறும் செய்முறை விளக்கங்கள் கேட்க முடியாமல் போய்விடும்.

குறிப்புச் சொற்கள்