தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்படிக்கட்டில் விழுந்த 3 வயது சிறுவனின் விரல் சிக்கிக்கொண்டது

2 mins read
814e3259-756c-43a4-836a-e2fd532cd62f
சிறிய காயத்துடன் தப்பித்த சிறுவன். - படம்: Prem Singapoo Incidents/யூடியூப் காணொளியில் இருந்து எடுக்கப்பட்டது

கேலாங்கில் உள்ள சிட்டி பிளாசா கடைத்தொகுதியில், மின் படிக்கட்டில் விழுந்த மூன்று வயது சிறுவனின் விரல் அதில் சிக்கிக்கொண்டது.

ஜனவரி 2ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 2.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி குழந்தையை விடுவித்து, கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அது கூறியது.

ஜனவரி 3ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திருமதி சோனியா என்று அடையாளப்படுத்திக்கொண்ட அச்சிறுவனின் தாயார், சம்பவம் குறித்து அவரது தாயாரிடமிருந்து அழைப்பு வந்தபோது தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் பீதியடைந்ததாகவும் கூறினார்.

இரண்டாவது மாடியிலிருந்து முதல் தளத்துக்கு படிக்கட்டில் சென்றுகொண்டிருந்தபோது, சிறுவன் தனது பாட்டியின் கையைப் பிடிக்க மறுத்து, படியின் கைப்பிடியைப் பிடித்திருந்தான்.

ஆனால் கைப்பிடி “திடீரென்று பின்னோக்கிச் சென்றது,” என்று அந்த மூதாட்டி திருவாட்டி சோனியாவிடம் கூறினார்.

சிறுவன் கீழே விழுந்தான். அவனது விரல் மாட்டிக்கொண்டது. உடனடியாக மின் படிக்கட்டு நிறுத்தப்பட்டதுடன் கடைத்தொகுதியின் ஊழியர்கள் விரைந்து வந்துவிட்டதாகவும் அந்த மூதாட்டி சொன்னார்.

சிறுவனின் விரலில் ஒரு சிறிய வெட்டு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றாலும் எதிர்காலத்தில் அவரை மின் படிக்கட்டில் அழைத்துச் செல்ல பயப்படுவேன் என்று திருவாட்டி சோனியா கூறினார்.

சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்ட இந்தச் சம்பவத்தின் காணொளியில் சிறுவனும் அவனது பாட்டியும் செய்வதறியாது மின் படிக்கட்டு படிகளில் அமர்ந்திருப்பதும் இருவர் அவர்களிடம் பேசுவதும் தெரிகிறது.

சிட்டி பிளாசாவை நிர்வகிக்கும், ஓம்ஹோம் சொத்து நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர், சிறுவன் “தவறி விழுந்த” சம்பவம் பிற்பகல் 2.10 மணிக்கு நடந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

“சிறுவனின் விரல் மின் படிக்கட்டுப் படியில் சிக்கியது. கடைத்தொகுதியின் ஊழியர்கள் சிறுவனையும் அவனது குடும்பத்தாரையும் உதவி வரும் வரை பொறுமையுடன் கவனித்துக்கொண்டனர்” என்றார் அவர்.

“பாதுகாப்பு கருதி மின் படிக்கட்டு நிறுத்தப்பட்டது. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் ஆம்புலன்சும் 10 நிமிடங்களுக்குள் வந்து சிறுவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்தன,” என்றும் அவர் கூறினார்.

“மீட்புக் குழுவினர் சென்ற பிறகு, நியமிக்கப்பட்ட மின்படிக்கட்டு பராமரிப்பு நிறுவனம் ஆய்வு செய்யும் வரை அந்த மின் படிக்கட்டு நிறுத்தப்பட்டது,” என்று கூறிய அவர், சோதனைக்குப் பிறகு மின்படிக்கட்டு செயல்படுத்தப்பட்டது என்றார்.

குறிப்புச் சொற்கள்