தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் எஃப்ஏஎஸ் துணை இயக்குநர்

2 mins read
736b88db-fcac-4320-b066-e5a8a75a444d
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை ஏமாற்றிப் பணம் பறித்ததாக ரிக்ரம் ஜீத் ரந்தீர் சிங், அவரது மனைவி ஆஸ்யா கிரின் காமெஸ் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் முன்னாள் துணை இயக்குநர் ரிக்ரம் ஜீத் சிங் ரந்தீர் சிங் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை ஏமாற்றி தம்முடன் அல்லது தமது மனைவியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு $609,380 தர ரிக்ரம் ஏற்பாடு செய்தார்.

இதன்மூலம் ரிக்ரமும் அவரது மனைவியான ஆஸ்யா கிரின் காமெசும் $127,896 லாபம் ஈட்டினர்.

இந்தத் தொகையை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பணம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திடம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 3ஆம் தேதியன்று 43 வயது சிங்கப்பூரரான ரிக்ரம், தம்மீது சுமத்தப்பட்ட 15 மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் ரிக்ரம் சேர்ந்தார்.

அதையடுத்து, அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

2013ஆம் ஆண்டில் அவர் ஆஸ்யாவைச் சந்தித்தார். அப்போது ஆஸ்யா சங்கத்தின் தொடர்புத்துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.

அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆஸ்யா சங்கத்திலிருந்து விலகி, நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

2018ஆம் ஆண்டில் ரிக்ரமும் ஆஸ்யாவும் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது ஆஸ்யாவுக்கு 37 வயது.

இந்நிலையில், காற்பந்து ஆட்டம் தொடர்பான பொருள்களுக்காக சங்கம் ஒதுக்கிய நிதியை ரிக்ரம் தம்முடன் அல்லது தமது மனைவியுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பெறச் செய்தார்.

சங்கத்தை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ள முன்னாள் சக ஊழியரான 51 வயது பழனியப்பன் ரவிந்திரனின் நிறுவனத்தை ரிக்ரம் பயன்படுத்தினார்.

ரிக்ரமின் மோசடித் திட்டம் ரவிந்திரனுக்குத் தெரியும் என்று அரசாங்க வழக்கறிஞர் தியாகேஷ் சுகுமாறன் தெரிவித்தார்.

சங்கம் வழங்கும் தொகையைத் தமது நிறுவனம் பெற்றுக்கொள்கிறது எனும் தகவல் வெளியே தெரிந்தால் சந்தேகம் எழும் என்று கருதிய ஆஸ்யா,  47 வயது சங்கர் சுப்பையாவை நிறுவனத்தின் உரிமையாளராக்கினார்.

தம்மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுகளை சங்கர் ஒப்புக்கொண்டார். அவருக்கு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆஸ்யா, ரவிந்திரன் ஆகியோரின் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரிக்ரம் தொடர்பான வழக்கிற்கு ஜனவரி 16ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.

அவருக்கு 24 மாதங்களிலிருந்து 30 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்