ஐபி தேர்வு முடிவுகள்: உலகளாவிய சராசரியைவிட சிங்கப்பூர் மாணவர்கள் மேம்பட்ட தேர்ச்சி

ஐபி தேர்வு முடிவுகள்: உலகளாவிய சராசரியைவிட சிங்கப்பூர் மாணவர்கள் மேம்பட்ட தேர்ச்சி

1 mins read
8426a1f7-8732-4a86-a36a-3f6bf869b7b6
தங்கள் ஐபி தேர்வு முடிவுகளைப் பார்த்து மகிழும் ஆங்கிலோ சீன பள்ளி (தன்னாட்சி) மாணவிகளான ஜோடி டியோ (இடது), ஜோசஃபின் கயாடி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக பெக்கலரேட் (ஐபி) பட்டயச் சான்றிதழ் தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைவிட மேம்பட்ட தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, உலகளாவிய சராசரியைவிட சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

ஐபி தேர்வுகளுக்கான மொத்த புள்ளிகள் 45.

உலகளாவிய சராசரி 29.06 புள்ளிகள் ஆகும்.

சிங்கப்பூர் மாணவர்களின் சராசரி புள்ளிகள் 37.76.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூரில் உள்ள 25 பள்ளிகள் ஐபி தேர்வுகளை நடத்தின.

அவற்றில் ஆங்கிலோ சீனப் பள்ளி (தன்னாட்சி), செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையம், மதராசா அல்ஜுனிட் அல் இஸ்லாமியா, சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, சிங்கப்பூர் கலைப் பள்ளி ஆகியன அடங்கும்.

பட்டயச் சான்றிதழ் திட்டம், வாழ்க்கைத் தொழில் தொடர்பான திட்டம் ஆகியவற்றின் சிங்கப்பூர் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை ஜனவரி 3ஆம் தேதி பெற்றுக்கொண்டதாக சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட ஐபி அமைப்பு கூறியது.

இந்த அமைப்பு ஐபி தேர்வுகளை நடத்துகிறது.

உலகளாவிய நிலையில் 20,385 மாணவர்கள் கடந்த ஆண்டு ஐபி தேர்வுகளை எழுதினர்.

45க்கு 45 என முழு மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை ஐபி அமைப்பு கடந்த மே மாதத்திலிருந்து நிறுத்திக்கொண்டது.

ஐபி திட்டத்தில் சிங்கப்பூர் 2005ஆம் ஆண்டில் சேர்ந்தது.

2005ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய நிலையில், முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் குறைந்தது 50 விழுக்காட்டினர் சிங்கப்பூர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்