தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லசாடா ஆட்குறைப்பு: என்டியுசி ஏமாற்றம்

2 mins read
1ffabf62-14de-49c2-8abb-1f9736650991
பிராஸ் பசா சாலையில் அமைந்துள்ள தி லசாடா கட்டடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லசாடா நிறுவனம் செய்த அண்மைய ஆட்குறைப்பு பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசும் (என்டியுசி) லசாடா ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் தொழிற்சங்கமும் தெரிவித்துள்ளன.

உணவு, பானங்கள், ஒப்பந்தமுறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்துடன் கலந்து பேசாமல் லசாடா ஆட்குறைப்பு செய்ததை என்டியுசி சுட்டியது.

இந்தத் தொழிற்சங்கம் லசாடா ஊழியர்களைப் பிரதிநிதித்து வரும்போதிலும் ஆட்குறைப்பு குறித்து அதனுடன் கலந்துரையாடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லசாடாவுடன் தொடர்புகொண்டு தனது அதிருப்தியை அந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்துள்ளது என்றும் இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“அனைத்து ஊழியர்கள், குறிப்பாக சிங்கப்பூர் ஊழியர்களின் நலனைப் பேணிக் காக்க நியாயமான செயல்முறை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கங்களுடன் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

“மற்ற தெரிவுகள் குறித்து நன்கு ஆராய்ந்த பிறகு வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே ஆட்குறைப்பு செய்வது பற்றி நிறுவனங்கள் யோசிக்க வேண்டும். மேலும் ஆட்குறைப்பு செய்யும் காலகட்டத்தைப் பற்றி நிறுவனங்கள் யோசிக்க வேண்டும். முடிந்தவரை விழாக்காலங்களில் அவற்றை செய்வதைத் தவிர்ப்பது நல்லது,” என்று என்டியுசி தெரிவித்தது.

ஜனவரி 3ஆம் தேதியன்று லசாடா ஆட்குறைப்பு செய்தது. ஆனால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

“எதிர்கால வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் துடிப்புடன் இருக்க எங்கள் ஊழியரணியை மாற்றி அமைக்கிறோம்,” என்று ஆட்குறைப்பு குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்கு லசாடா பேச்சாளர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும் லசாடா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் புதிய வேலை தேட வேலை வாய்ப்பு, வேலைத் திறன் பயிற்சிக் கழகம் உதவும் என்று என்டியுசி தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 6737-6088 எனும் எண் மூலம் உணவு, பானங்கள், ஒப்பந்தமுறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்