தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிடிசி பற்றுச்சீட்டுகள்: இதுவரை $8 மி. செலவழிக்கப்பட்டுள்ளது

2 mins read
66e07890-1445-474f-959a-5171fd60aba2
சிடிசி பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv எனும் இணையப்பக்கத்திற்குச் சென்று மின்னிலக்க வடிவில் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பத்துக்கும் ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஏறத்தாழ $8 மில்லியன் செலவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.27 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களில் ஏறத்தாழ 60 விழுக்காடு குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுவிட்டதாக தென்மேற்கு வட்டாரத்தின் மேயரும் மேயர்கள் குழுவின் தலைவருமான திருவாட்டி லோ யென் லிங், சமூக ஊடகம் வாயிலாக ஜனவரி 5ஆம் தேதியன்று தெரிவித்தார்.

“அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவும் வர்த்தகங்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த சிடிசி பற்றுச்சீட்டுகள் உதவும் என நம்புகிறோம். குறிப்பாக, இந்த விழாக்காலத்துக்கும் புதிய கல்வி ஆண்டிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்,” என்று திருவாட்டி லோ பதிவிட்டார்.

அன்றாடச் செலவுகளை மேலும் குறைக்க சிடிசி பற்றுச்சீட்டுத் திட்டத்தில் பங்கெடுக்கும் பேரங்காடிகள், கூடுதல் பற்றுச்சீட்டுகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளன.

சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச தொகையைச் செலவு செய்தால் கூடுதல் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம், யு ஸ்டார்ஸ் பேரங்காடி, கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடிகளை நடத்தும் டிஎஃப்ஐ சில்லறை வர்த்தகக் குழுமம், சிஎஸ் ஃபிரெஷ், ஜேசன்ஸ் டெலி ஆகியவை தெரிவித்துள்ளன.

டிஎஃப்ஐ சில்லறை வர்த்தகக் குழுமம் நடத்தும் ஜயண்ட் பேரங்காடிகளில் ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி $100 செலவழித்தால் 2.5 கிலோ அரிசி மூட்டை இலவசமாகக் கிடைக்கும்.

சிடிசி பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv எனும் இணையப்பக்கத்திற்குச் சென்று மின்னிலக்க வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.

அவற்றை 23,600க்கும் அதிகமான குடியிருப்புப் பேட்டை வர்த்தகங்கள், அங்காடி உணவு நிலையக் கடைகள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

தீவெங்கும் உள்ள 415 பேரங்காடிகளிலும் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்