மோட்டார் சைக்கிளைத் தனியார் வாடகை வாகனமாகப் பயன்படுத்திய ஆடவருக்கு $1,800 அபராதமும் வாகனம் ஓட்ட 12 மாதத் தடையும் விதிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் இத்தகைய வழக்கு பதிவு செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
சட்டவிரோதமாக கார், மோட்டார் சைக்கிள் சேவை வழங்குவோரைக் கண்டுபிடிக்க கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இரண்டு கார் ஓட்டுநர்களும் ஒரு மோட்டார் சைக்கிளோட்டியும் சிக்கியதாக நிலப் போக்குரவரத்து ஆணையம் கூறியது.
சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மோட்டார் சைக்கிளைத் தனியார் வாடகை வாகனமாகப் பயன்படுத்தியதற்காகவும் தகுந்த காப்புறுதித் திட்டம் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தியதற்காகவும் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
“பணத்துக்காக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி தனியார் வாடகை வாகனச் சேவை வழங்கிய குற்றத்தின் பேரில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது இதுவே முதல்முறை,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி காலை 8.45 மணி அளவில் புளோக் 505D ஈசூன் ஸ்திரீட் 51ல் மோட்டார் சைக்கிளோட்டியான 33 வயது முகம்மது ஹஸ்புல்லா ரோஸ்லியை நிலப் போக்குரவரத்து ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி சோதனையிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
அறிமுகமில்லாத பயணி ஒருவரிடமிருந்து $18 பெற்றுக்கொண்டு அவரை மோட்டார் சைக்கிளில் ஈசூன் ஸ்திரீட் 51லிருந்து சுவா சூ காங்கில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்குக் கல்லூரிக்குக் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.
பணம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் வாடகை வாகனச் சேவை வழங்குவது குற்றம் எனத் தெரிந்தே, கூடுதல் வருமானம் ஈட்ட ஹஸ்புல்லா அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹஸ்புல்லா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

