மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதிய பேருந்து: விசாரணையில் உதவும் 72 வயது ஓட்டுநர்

1 mins read
13e253e7-0293-4cb7-b777-ec668eb046fa
72 வயது ஆடவர் ஓட்டிய தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதுவதைக் காணொளி காட்டியது. - படம்: எஸ்ஜி ரோட் விஜிலாண்டே

ஜனவரி 8ஆம் தேதி காலை, கிளமெண்டி வட்டாரத்தில் சாலை விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து குறித்த விசாரணையில் 72 வயது ஆடவர், காவல்துறைக்கு உதவி வருகிறார்.

இந்த ஆடவர் விபத்துடன் தொடர்புடைய பேருந்தை ஓட்டியவர்.

விபத்தைக் காட்டும் 27 வினாடிக் காணொளி, எஸ்ஜி ரோட் விஜிலேன்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த ஆடவர் ஓட்டிய தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதுவதைக் காணொளி காட்டியது.

அந்த 46 வயது மோட்டார் சைக்கிளோட்டி தமக்கு முன்னால் இருந்த கார் மீது விழுந்தார்.

பேருந்து அவர் மீது மோதிய வேகத்தில் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்றது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர்கள் அவரைத் தூக்குப் படுக்கையில் தூக்கி வைக்கத் தயாராகிக் கொண்டிருந்ததையும் காணொளி காட்டியது.

காலை 7.15 மணி அளவில் கிளமெண்டி அவென்யூ 6க்கும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் கார், பேருந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்தில் சிக்கியதாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.

அந்த மோட்டார் சைக்கிளோட்டியை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.

குறிப்புச் சொற்கள்