தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தத்துப் பிள்ளை துன்புறுத்தல்: அண்மை ஆண்டுகளில் வழக்குகள் இல்லை

2 mins read
b411d801-d39a-4d5b-bb70-787486c396b5
தத்தெடுப்பதற்காக அடையாளம் காணப்படும் சிறுவர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, தத்தெடுக்க விரும்பும் தம்பதியர் இடையிலான உறவு சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய அவர்களிடம் நேர்காணல் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறியது. - படம்: ஷின்மின்

தத்தெடுக்கும் நடைமுறையில் சிறார் நலனை உறுதி செய்வதற்குப் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நடப்பில் உள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாம் தத்தெடுக்க விரும்பிய பதின்மவயதுச் சிறுமியை ஆடவர் ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து அமைச்சு இவ்வாறு கூறியது.

சிறுவர்களைத் தத்தெடுக்கும்போது அவர்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அமைச்சு பட்டியலிட்டுக் காட்டியது.

தத்தெடுப்பதற்காக அடையாளம் காணப்படும் சிறுவர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, தத்தெடுக்க விரும்பும் தம்பதியர் இடையிலான உறவு சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய அவர்களிடம் நேர்காணல் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறியது.

“பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் குடும்பங்களுடன் ஒவ்வொரு சிறுவரையும் இணைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

“ஆனால் தத்தெடுக்கப்படும் சிறுவருக்கும் வளர்ப்புப் பெற்றோருக்கும் இடையிலான உறவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று முன்னுரைப்பது சாத்தியமன்று. இருப்பினும், தத்துப்பிள்ளையை வளர்ப்புப் பெற்றோர் துன்புறுத்தியதாக அண்மைய ஆண்டுகளில் வழக்குகள் ஏதும் பதிவாகவில்லை,” என்று அமைச்சு கூறியது.

தங்கள் பராமரிப்பின்கீழ் உள்ள தத்துப்பிள்ளைகளைத் துன்புறுத்தியதற்காகப் பிடிபட்ட வளர்ப்புப் பெற்றோரின் எண்ணிக்கை குறித்தும் அமைச்சிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியது.

தமது மனைவியுடன் சேர்ந்து தத்தெடுக்க விரும்பிய பதின்மவயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 39 வயது ஆடவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதியன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 16 அல்லது 17 வயது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சு, அந்த ஆடவரும் அவரது மனைவியும் சிறுமியைத் தத்தெடுக்க முன்வந்தபோது அவர்களுக்கு எதிராக எவ்வித குற்றப் பதிவுகளும் இல்லை என்று கூறியது. அந்தச் சிறுமியை அவர்கள் தத்தெடுப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று பயிற்சி பெற்ற நிபுணர்கள் மதிப்பீடு செய்து முடிவெடுத்ததாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்