சாகச நடவடிக்கையின்போது மாண்ட மாணவர்: நிறுவனம், ஊழியர் மீது குற்றச்சாட்டு

சாகச நடவடிக்கையின்போது மாண்ட மாணவர்: நிறுவனம், ஊழியர் மீது குற்றச்சாட்டு

1 mins read
4a169126-2654-4d06-a9b2-2f64359b5748
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் லியூ ஃபூ லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புற சாகச நடவடிக்கையின்போது நிகழ்ந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, ஆங்கிலோ சீன பள்ளியைச் (தன்னாட்சி) சேர்ந்த மாணவரான 15 வயது ஜெத்ரோ புவா சின் யாங் மாண்டார்.

இந்தச் சம்பவம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று ஈசூனில் உள்ள சாஃப்ரா சாகச விளையாட்டுகள் மையத்தில் நிகழ்ந்தது.

சாகச நடவடிக்கைகளில் ஈடுபட்டோரின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையானவற்றைச் செய்ய அந்த வெளிப்புற சாகச நடவடிக்கைகளை நடத்திய ‘கேம்லோட்’ நிறுவனமும் அதன் ஊழியரான லியூ ஃபூ லூங்கும் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சாகசத்தில் ஈடுபட்டபோது, புவா கால் தவறியதில் அந்தரத்தில் தொங்கினார்.

பிறகு, அவரைக் கீழே இறக்கிவிடும்போது அவர் சுயநினைவு இழந்தார்.

மீட்புப் பணிகளின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான நடவடிக்கைகள் குறித்து பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்க 35 வயது லியூவும் கேம்லாட் நிறுவனமும் தவறியதாகக் கூறப்படுகிறது.

சாகச நடவடிக்கையில் புவா ஈடுபடுவதற்கு முன்பு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்யவில்லை என்று கேம்லோட் நிறுவனத்தின் வெளிப்புற சாகச நடவடிக்கைப் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான 23 வயது முகம்மது நூருல் ஹகிம் முகம்மது டின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்