‘லாங் ஐலண்ட்’ திட்டத்துக்கான மணல் இறக்குமதி தொடர்பில் வெளிப்படையான தகவல்களுக்குக் கோரிக்கை

‘லாங் ஐலண்ட்’ திட்டத்துக்கான மணல் இறக்குமதி தொடர்பில் வெளிப்படையான தகவல்களுக்குக் கோரிக்கை

2 mins read
4295c75d-5719-4954-8460-a6385db6583e
சித்திரிப்புப் படம்: - நகர மறுசீரமைப்பு ஆணையம்

நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்துக்கான மணல் இறக்குமதி அதிக முக்கியத்துவம் பெற்ற அம்சமாக விளங்கியது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகே அமையவிருக்கும் மிகப் பெரிய நிலமீட்புத் திட்டமான ‘லாங் ஐலண்ட்’ தீவுத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இத்திட்டத்திற்கான மணலைப் பெறுவதற்குப் பொறுப்பு வகிக்கும் கட்டமைப்பு உள்ளதா என்பதில் தொடங்கி, முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பதைச் சோதிக்கும் நடைமுறைகள் வரை பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டனர்.

‘லாங் ஐலண்ட்’ தீவை உருவாக்க ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திற்கு அருகே 800 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் மீட்கப்படவிருக்கிறது.

உயரும் கடல்மட்டம், ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் ஏற்படக்கூடிய வெள்ளம் ஆகிய அச்சுறுத்தல்களைக் கையாளும் விதமாக அரசாங்கம் இத்திட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

இதற்கான மணல் எங்கிருந்து தருவிக்கப்படும், எந்தெந்த நாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற பட்டியலை அரசாங்கம் வெளியிடுமா என்று செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கும் கேட்டனர்.

மணல் இறக்குமதி நிறுவனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுமா என்று செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரு வினவினார்.

இவர்களுக்குப் பதிலளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “வர்த்தக ரீதியில், பல்வேறு தரப்புகளிலிருந்து சிங்கப்பூருக்கு மணல் இறக்குமதி செய்யப்படும்,” என்றார்.

இறக்குமதியாளர்கள் அவர்கள் இறக்குமதி செய்யும் நாடுகளின் சட்ட, விதிமுறைகளுக்கு ஏற்பச் செயல்படுவது கட்டாயம் என்றார் அவர்.

தேவைப்பட்டால், இறக்குமதியாளர்கள் அந்த நாடுகளில் உரிய அனுமதி பெற்றிருக்கிறார்களா என்பதை மணல் தருவிக்கப்படுவதற்கு முன்பே அரசாங்கம் சரிபார்க்கும் என்று அமைச்சர் லீ கூறினார்.

இத்திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்த விரிவான ஆய்வு பல ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்