தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லீ குவான் யூ கண்ணீர் விட்டு அழுவதைக் காட்டும் ஒரே புகைப்படத்தை எடுத்தவர் காலமானார்

2 mins read
bc9e1fd1-9af3-48c2-8abb-114501b6d6e2
தமது கொள்ளுப் பேத்தியுடன் திரு அலி யூசோஃப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாவதைப் பற்றி அறிவித்தபோது திரு லீ குவான் யூ கண்ணீர் வடித்தார்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க காட்சியைக் காட்டும் புகைப்படப் பிரதி ஒன்று மட்டுமே உள்ளது.

அதை எடுத்த பெருமை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் புகைப்படக் கலைஞர் திரு அலி யூசோஃபைச் சேரும்.

திரு அலி ஜனவரி 7ஆம் தேதியன்று காலமானார்.

அவருக்கு 84 வயது.

ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து திரு அலி, கூ டெக் புவாட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாக அவரின் ஆக இளைய மகனான 43 வயது திரு மார்லிநஸ்‌ரூல் அலி தெரிவித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புகைப்படக் கலைஞராக திரு அலி இளம் வயதிலிருந்தே பணியாற்றியதாக திரு மார்லிநஸ்‌ரூல் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது தந்தை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியதாகக் கூறிய திரு மார்லிநஸ்‌ரூல், மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பல புகைப்படங்களைத் தம் தந்தை எடுத்ததாகத் தெரிவித்தார்.

திரு லீ குவான் யூ கண்ணீர் விட்டு அழுவதைக் காட்டும் புகைப்படமே தமது தந்தைக்கு மிகவும் பிடித்தமானது என்றார் அவர். அந்தப் படமே தமது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது என்று திரு மார்லிநஸ்‌ரூல் கூறினார்.

2015ஆம் ஆண்டில் திரு அலியை தி நியூ பேப்பர் நாளிதழ் பேட்டி எடுத்தது.

அப்போது 1965ஆம் ஆண்டில் திரு லீயை அவர் படம் எடுத்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

திரு லீ கண்ணீர் விட்டு அழுதபோது அந்த அறை மிகவும் அமைதியாக இருந்ததாக திரு அலி கூறினார்.

தமது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரைத் திரு லீ துடைத்தபோது மற்ற புகைப்படக் கலைஞர்கள் அவரைப் படமெடுக்கத் தயங்கியதாக திரு அலி தெரிவித்தார்.

தாம் மட்டுமே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படமெடுக்கத் தொடங்கியதாக திரு அலி கூறினார்.

“நான் படமெடுத்துக்கொண்டிருந்தபோது எனது இதயத் துடிப்பு அதிகரித்தது. திரு லீ என்னைத் திட்டுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை,” என்று திரு அலி தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

திரு அலியின் மரணம் அவரை நன்கு அறிந்தவர்களையும் அவருடன் பணியாற்றியவர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் திரு அலியின் குடும்பத்துக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

திரு அலிக்கு மூன்று பிள்ளைகளும் ஆறு பேரப்பிள்ளைகளும் இரண்டு கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்