குடியிருப்பாளர் எண்ணிக்கை வரம்பை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

2 mins read
b24e3275-b643-49fb-bad7-a3294f319055
படம் - தமிழ் முரசு

பெரிய பொது வீடமைப்பு வீடுகள், தனியார் வீடுகளுக்ககான குடியிருப்பாளர் எண்ணிக்கை வரம்பு தற்காலிகமாக அதிகரிக்கப்படும்.

எனினும், இதன் தொடர்பில் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் டான் கியட் ஹாவ் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 9) தெரிவித்தார்.

வாடகை வீடுகளுக்கு இருக்கும் தேவை காரணமாக எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை அதுபோன்ற வீடுகளில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத எட்டு பேர் தங்க அனுமதிக்கப்படுவர். ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதவர்கள் என்பது எட்டு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று பொருள்படும்.

இதன் தற்போதைய வரம்பு ஆறு பேர் என்பது நினைவுகூரத்தக்கது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் அல்லது அதில் அறைகளை வாடகைக்கு எடுப்போர் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகள் கருத்துச் சேகரிப்பு பெறப்பட்டது. இதில் அக்கம்பக்கத்தாருக்குத் தொல்லை தரும் சம்பவங்கள் என்று பார்த்தால் 1.5% சம்பவங்களே என்று அமைச்சர் விளக்கினார்.

இதன் தொடர்பில் கடந்த மாதம் தற்காலிகமாகக் குடியிருப்பாளர் எண்ணிக்கை வரம்பு அதிகரிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளையோ, வீட்டு அறைகளையோ வாடகைக்கு விடுமுன் கழகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்.

இதுபோல், தனியார் வீடுகள் தொடர்பிலும் உரிமையாளர்கள் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றார் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்