தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் குற்றங்கள்: தடயவியல் ஆதாரங்களைத் தர மறுத்தால் சிறை

2 mins read
f2c2a383-661e-4380-9ed7-6f1dbc3193b0
பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து தீர்வு காணப்படாத வழக்குகளுக்கும் தீர்வு காண தடயவியல் மருத்துவப் பரிசோதனையால் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குற்றவியல் நடைமுறை (பல அம்ச திருத்த) மசோதா ஜனவரி 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, பாலியல் குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் தகுந்த காரணமின்றி தடயவியல் பரிசோதனைக்கு உட்பட மமறுத்தால், அவர்களுக்குஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தடயவியல் மருத்துவப் பரிசோதனையில் உடல்ரீதியான மருத்துவப் பரிசோதனைகள், உடல் உறுப்புகளிலிருந்து மாதிரிகளைப் பெறுவது, படங்கள் எடுப்பது, அந்தரங்க உறுப்புகள் உட்பட உடல் உறுப்புகளின் வடிவங்களைப் பதிவு செய்தல் ஆகியவை அடங்கும்.

இத்தகைய தடயவியல் ஆதாரங்கள் புலன்விசாரணைக்கு மிகவும் முக்கியமானவை என்று உள்துறை அமைச்சும் சட்ட அமைச்சும் தெரிவித்தன.

குறிப்பிட்ட சில தடயவியல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு மாற்று பரிசோதனை இல்லை என்று அமைச்சுகள் கூறின.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தடயவியல் மருத்துவப் பரிசோதனைகள் முக்கியமாக இருந்து வருகின்றன.

2016ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

ஆடவர் ஒருவர், பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரைத் தாக்கியதோடு பாலியல் வன்கொடுமை செய்து அவரது கைப்பேசியைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அந்த ஆடவர் அதே நாளன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தடயவியல் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது உடல் உறுப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மரபணு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து தீர்வு காணப்படாத வழக்குகளுக்கும் தீர்வு காண தடயவியல் மருத்துவப் பரிசோதனைகளால் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாலியல் குற்றம் உதாரணமாகக் காட்டப்பட்டது.

12 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு அருகில் 23 வயது ஆடவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து உடற்கூறு மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இன்னொருவரின் மரபணு அந்தச் சிறுமியின் உடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அது யாருடையது என்று அப்போது தெரியவில்லை.

இருப்பினும், 12 ஆண்டுகள் கழித்து திருட்டுக் குற்றத்துக்காக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சிறுமியின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணுவும் அந்த ஆடவரின் மரபணுவும் ஒன்று என்று தெரியவந்தது.

எனவே, பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காண தடயவியல் மருத்துவப் பரிசோதனை பெரும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிடும் நிபுணர்கள், பாலியல் குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்களிடமிருந்து தடயவியல் ஆதாரங்களைப் பெற்றுக்கொள்வதை வரவேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்