பாசிர் ரிஸில் கொள்ளையடிக்க முயன்ற 15 வயது ஆடவர் கைது

பாசிர் ரிஸில் கொள்ளையடிக்க முயன்ற 15 வயது ஆடவர் கைது

2 mins read
c10611ab-195a-4fd6-95f1-cd529db25e2b
சம்பவத்தின்போது இளையர் அணிந்திருந்ததாக நம்பப்படும் ஒரு காலணியை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். - படங்கள்: ஷின் மின்

பாசிர் ரிஸ், இலாயஸ் கடைத்தொகுதியிலுள்ள வேகவைத்த பன் ரொட்டி விற்கும் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 15 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலாயஸ் ரோட்டில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து ஜனவரி 11ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

56 வயதான மாதுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காலல்துறை குறிப்பிட்டது.

இரவு 6.10 மணிக்கு உதவிக்கான அழைப்பு வந்ததாகவும் காயமடைந்தவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

திரு சென் என்று தன்னை அடையாளப்படுத்திய ‘பேபி பன்’ கடை உரிமையாளர், அந்த இளையர் முதலில் கடைக்குள் நுழைந்தபோது அவர் பன்களை வாங்க விரும்புவதாக நினைத்தார்.

“ஆனால் அந்தப் பையன் ‘நோ, நோ’ என்று தலையாட்டினான்,” என்று அந்த 61 வயது முதியவர் கூறியதாக ஷின் மின் செய்தி தெரிவித்தது. அவர் தன் மனைவியுடன் கடையில் இருந்தார்.

“அவருக்கு என்ன வேண்டும் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென்று ஒரு கூர்மையான பொருளை எடுத்து, ஏதோ சொல்லி, பின்னர் பணப் பெட்டியைச் சுட்டினார். அவர் சொன்னது எங்களுக்குப் புரியவில்லை”.

இளையர் கொள்ளையடிக்க விரும்புவதை தம்பதியினர் உணர்ந்தனர். ஆனால், பேசும் மொழி புரியாததால் அவர்கள் அவரை அமைதிப்படுத்த சைகைகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

இளையர் கோபமடைவதைக் கண்ட தம்பதியர் தங்கள் பாதுகாப்பு கருதி, இளையரின் கட்டளைக்கு இணங்க நினைத்ததாக சீன மொழி நாளேட்டிடம் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், திரு. சென் பணப் பெட்டியைத் திறக்கவிருந்த நேரத்தில், அவ்வழியாக ஒருவர் நடந்தார். திருமதி சென் பணத்தைக் கொடுக்க வேண்டாம் என்று கணவரிடம் சத்தமாகச் சொன்னார்.

“கடைக்கு வெளியே ஆட்கள் இருப்பதை இளையர் திரும்பிப் பார்த்தார்,” என்றார் திரு சென்.

“அவர் பயந்திருக்கலாம். ஆயுதத்தை எங்கள் மீது வீசிவிட்டு அவர் தப்பி ஓடினார்,” என்றார் அவர்.

இளையர் வீசிய ஆயுதம் தற்செயலாக திருவாட்டி சென் மார்பில் தாக்கியதில் அவரது மார்பில் 5 செ. மீ. காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்த காலணி ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அது அந்த இளையர் குற்றம் புரிந்தபோது அணிந்திருந்ததாக நம்பப்படுகிறது என்று ஷின் மின் செய்தி குறிப்பிட்டது.

அந்தச் சம்பவத்தின் தொடர்பில் 15 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்