நூறு இந்தியப் பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் விழா

“ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது”

“ஒத்தையா ரெட்டையா”

“சின்ன சின்ன பூவே மெல்ல வந்து தொட்டுப் போ”

பாவாடைகள் சரசரக்க அங்குமிங்கும் குதித்து விளையாடிய சிறுமிகள், தாவணி, சேலைகளில் உலா வந்த நங்கைகள், வேட்டி சட்டை உடுத்திய ஆண்கள் என வண்ணமயமாகக் காட்சியளித்த கீட் ஹாங் பகுதியில் ஒலித்த ஆரவாரங்கள் இவை.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் நாளன்று, கீட் ஹாங் சமூக மன்றத்தில் 100 பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, கலந்துகொண்ட அனைவருக்கும் அவ்விளையாட்டுகளும் சொல்லித் தரப்பட்டன.

வரிசை விளையாட்டுகள், கட்டம், வட்டம் விளையாட்டுகள், தாய விளையாட்டுகள், பலவகைப் பல்லாங்குழி ஆட்டம், ஆடுபுலி ஆட்டம், ஏழாங்கல், நவகங்காரி, விண்மீன் விளையாட்டுகள், குச்சி, சோழி விளையாட்டுகள் எனப் பல உள்ளரங்க விளையாட்டுகளும் கோலி, கில்லி, பாண்டி உள்ளிட்ட வெளிப்புறத்தில் ஆடும் விளையாட்டுகளும் இடம்பெற்றன.

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இதனை இடம்பெறச் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கீட் ஹாங் அடித்தள அமைப்பின் ஆலோசகர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் இணைந்து பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், கும்மி உள்ளிட்ட பல நிகழ்வுகளையும் நடத்தினர். பெண்கள் இணைந்து 11 பானைகளில் பொங்கல் வைத்தும் கொண்டாடினர்.

கீட் ஹாங் நற்பணிப் பேரவைச் செயற்குழுத் தலைவர் அருமைச்சந்திரன் கூறுகையில், “நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் சுவாரசியமான நிகழ்வை நடத்துவது வழக்கம். நாட்டுப்புற இசை, பாரம்பரியக் கலைகள் எனப் பலவற்றை முன்னர் நடத்திய நிலையில், தற்போது 100 விளையாட்டுகளை காட்சிப்படுத்தியிருப்பது பெருமை. குடும்பங்கள் இணைந்து இதனை விளையாடி மகிழ்வது பார்ப்பதற்கு மனநிறைவாகவும் இருக்கிறது,” என்றார்.

பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, மீட்டுருவாக்கமும் செய்து வரும் பெங்களூரைச் சேர்ந்த இமாகுலேட் இந்த விளையாட்டுகளுக்குப் பயிற்சியளித்துள்ளார்.

“கூடி விளையாடும் குடும்பங்களில்தான் மகிழ்ச்சி நிலைக்கும்; உறவுகள் பலப்படும்; பிணைப்புகள் வலுப்பெறும். இதனை உறுதிசெய்யவே, பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுத்து வருகிறேன். தொடக்கத்தில் 10 - 20 விளையாட்டுகள் இருக்கலாம் என நினைத்துத் தொடங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளேன். கடல் கடந்து சிங்கப்பூர் நகரில் இதனை அனைவரும் விளையாடிக் களிப்பதைப் பார்க்க நெகிழ்வாக இருக்கிறது,” என்றார் இமாகுலேட்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுவா சூ காங் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா, 36, “நண்பர்களுடன் இணைந்து பல்லாங்குழி உள்ளிட்ட பலவற்றை உற்சாகமாக விளையாடி வருகிறோம். குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுகளை அறிமுகம் செய்வது, புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்வது எனக் குதூகலமான அனுபவமாக இருக்கிறது,” என்றார்.

பல விளையாட்டுகளில் பங்கேற்ற சிறுவன் அஸ்வந்த், 11, “நான் நிறைய விளையாட்டுகள் விளையாடினேன். கற்களை வைத்து விளையாடியது, பரமபதம் என பலவற்றை விளையாடியது பொங்கல் கொண்டாட்டம் இப்போதே வந்துவிட்டதுபோல இருக்கிறது,” என்றார்.

பாரம்பரியக் கும்மியாட்டத்தை அரங்கேற்றிய சங்கீதா, 44, ஜிம்சி, 40, ரம்யா, 41, ஆகியோர் கூறுகையில், “நம் கலாசார அடையாளங்களில் ஒன்றான கும்மியாட்டத்தை நிகழ்த்துவது மகிழ்ச்சி. எங்களுக்கு முன்னதாக அறிமுகம் இல்லாவிட்டாலும், அனைவரும் இணைந்து கற்றுக்கொண்டு, பயிற்சி செய்து இதனை அரங்கேற்றுவது பெருமையாகவும் இருக்கிறது,” என்றனர்.

குத்து விளக்கு ஏற்றித் தொடங்கப்பட்ட பொங்கல் விழா படம்: லாவண்யா வீரராகவன்
பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டு. படம்: லாவண்யா வீரராகவன்
கம்பு சுழற்றும் சிறுவன். படம்: லாவண்யா வீரராகவன்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!