மண்வாசனையுடன் தைத் திருநாளை வரவேற்ற குடும்பம்

தைத் திருநாள் உழவர் திருநாள் என்பது அனைவரும் அறிந்ததே!

கதிரவனுக்கு நன்றி நல்கும் வகையில் கொண்டாடப்படும் இத்திருநாளை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் கொண்டாடுவது வழக்கம்.

அவ்வகையில், 63 வயதாகும் திருவாட்டி லலிதாம்மா நாயருக்கு பொங்கல் திருநாள் சற்று தனித்துவம் வாய்ந்தது.

தைத் திருநாளை உழவர் போல கிராஞ்சி பண்ணையில் குடும்பத்துடனும், உற்றார் உறவினர்களுடனும் அவர் வரவேற்கிறார்.

“இந்தியா போன்ற மற்ற நாடுகளில் பொங்கல் திருநாளை மண் வாசனையுடன் தமிழர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், சிங்கப்பூர் ஒரு நவீன நகரமாக இருந்தாலும், உழவர் கலாசாரத்தை நான் இளைய தலைமுறையினருக்கு ஊட்டி வளர்க்க விரும்புகிறேன்,” என்று இன்பம் பொங்கக் கூறினார் திருவாட்டி லலிதாம்மா.

கிராஞ்சி வட்டாரத்தில் இருக்கும் ‘ஃபார்ம் ரிசார்ட்’ எனும் உல்லாசத்தளம் ஒன்றில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து அதன் பின்புறத்தில் பயிர்களை நட்டு, சிறிய தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார் அவர்.

வேர்க்கடலை, கத்திரிக்காய், கரும்பு, முருங்கை, மிளகு, பொன்னாங்கண்ணி, வெண்டைக்காய் போன்ற செடிகள் அவர் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன.

வளர்க்கப்படும் கரும்புகளையும், இஞ்சி கொத்துகளையும் வைத்து இடத்தைப் பாரம்பரிய பாணியில் அலங்கரித்து, கோலமிட்டு, வண்ணச் சாயங்களால் பொங்கல் பானையை அலங்கரித்துள்ளார் திருவாட்டி லலிதாம்மா.

விழாக்கால உணர்வில் வந்தவர்கள் திளைக்க, குடும்பத்துடன் கிழக்குத் திசையைப் பார்த்து நின்றபடி, பானையில் பால் பொங்கி வரும் வேளையில், ‘பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று ஆரவாரத்துடன் தைத் திருநாளைக் கொண்டாடுகிறார் திருவாட்டி லலிதாம்மா.

வீவக வீட்டில் வசித்து வந்தாலும், மண் மணம் கமழும் விதத்தில் தை மாதத்தை வரவேற்பதில் அவருக்கு மேலும் உற்சாகம். சிறு வயதிலிருந்தே இயற்கைமீது பேரார்வம் கொண்ட திருவாட்டி லலிதாம்மா, தமது சிறுவயதில் மலேசியாவில் வசித்து வந்த தன் பாட்டியின் பூர்வீக ஊருக்குச் சென்று அங்கிருந்த தோட்டத்திலிருந்த செடி கொடிகளை ரசித்ததை நினைவுகூர்ந்தார்.

அந்த அனுபவம் சிங்கப்பூரில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் கடந்த ஐந்தாண்டுகளாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலத்தை பாதுகாத்து பயிர்களை கவனித்து வருகிறார்.

“மாணவர்கள் பாட புத்தகங்களில் பொங்கலை பற்றி கற்றிருப்பார்கள். சிறு பிள்ளைகள் நேரில் அதை கண்டு அனுபவிக்க வேண்டும். பெரியவர்களாகிய நாம் அவர்களுக்கு அதை நினைவூட்டி வளர்க்க வேண்டும்.” என்றார் திருவாட்டி லலிதாம்மா.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல, கூடிய விரைவில் தனது இரண்டாவது மகளின் ஆண் குழந்தை வருகைக்காக காத்திருக்கும் திருவாட்டி லலிதாம்மாவின் குடும்பத்தினர் இந்தப் பொங்கல் திருநாளை புதிய தொடக்கத்துடன் கொண்டாடுகிறார்கள்.

பொங்கல் வைத்த பிறகு, திருவாட்டி லலிதாம்மாவின் தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட வாழை இலைகளில் பரிமாறப்பட்ட சைவ உணவு விருந்தில் குடும்பத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பானங்களான மோரையும், கூழையும் சுவைத்தனர்.

“இயற்கையுடன் நான் ஒட்டி வாழ வேண்டும். என்னைப் போன்ற பல இயற்கை ஆர்வலர்கள் இருக்கிறார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு என்னால் ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் இடத்தை வாடகைக்கு எடுக்க முடிந்தது.” என்று குறிப்பிட்டார் திருவாட்டி லலிதாம்மா.

ஆண்டுதோறும் இந்திய மரபுடைமை நிலையம் பொங்கலுக்கு ஏற்பாடு செய்யும் கிராஞ்சி பண்ணைச் சுற்றுலாவையும் திருவாட்டி லலிதாம்மா வழிநடத்துகிறார்.

திருவாட்டி லலிதாம்மாவின் மூத்த மகனான சிவபிரசாத் பிள்ளை, 40, “வழக்கமாக சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாடும் அனுபவம் நம்மில் பலருக்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனக்கு இது புதுமையானது. என் அம்மா எடுத்துள்ள இந்த முயற்சியால் என்னால் உழவர் திருநாளை ஆழமாக அனுபவிக்க முடிகிறது. இதை நாம் கட்டிக்காக்க வேண்டும்,” என்று பகிர்ந்துகொண்டார்.

பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட குணாளன் தம்பதியினர், “எங்களுக்கு திருவாட்டி லலிதாம்மாவை சில காலமாகத் தெரியும். எங்கள் பிள்ளைகளை இதற்கு அழைத்து வருவதில் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. சிங்கப்பூரில் எங்களுக்குத் தெரிந்தவரை யாரும் ஒரு பண்ணையில் தைத் திருநாளை கொண்டாடியிருக்க மாட்டார்கள். பிள்ளைகளுக்கும் இது புதுமையான அனுபவமாக இருக்கும்,” என்று முகம் மலரச் சொன்னார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!