விலையேற்றத்திலும் குறையாத பொங்கல் குதூகலம்

2 mins read
db71950d-fcb4-46eb-b1e4-a7713de80265
பஃப்ளோ ரோட்டில் பொருள் வாங்கக் குவிந்த மக்கள். - படம்: கி.ஜனார்த்தனன்
multi-img1 of 3

பொங்கலுக்கு பானையும் கரும்பும் இஞ்சி, மஞ்சள் கொத்தும் வாங்க ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் பஃப்ளோ ரோட்டிலும் கேம்பல் லேனிலும் பொங்கல் திருநாளைக் கொண்டாடத் தேவையான பொருள்களை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.

ஆயினும், பச்சரிசி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலையேற்றத்தால் வணிகம் குறைந்திருப்பதாக லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள சில கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் கூறினர்.

வார இறுதி என்பதால் வாடிக்கையாளர் கூட்டம் வர்த்தகத்திற்குக் கைகொடுத்திருப்பதாக குடாச்சாரி காய்கறிக் கடை உரிமையாளர் சீதாதேவி ரமேஷ் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

இருந்தபோதும், ஐந்து, பத்தாண்டுகளுக்குமுன் இருந்த விழாக்கால வரவேற்பு இன்னும் திரும்பவில்லை என்று திருமதி சீதாதேவி வருத்தத்துடன் சொன்னார்.

கரும்பு, பொங்கலுக்குத் தேவைப்படும் அரிசி, மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து போன்ற பொருள்களின் விலை உயர்ந்துள்ளதையும் திருவாட்டி சீதாதேவி சுட்டினார்.

“முன்பு இரண்டு கரும்புகளின் விலை ஐந்து வெள்ளியாக இருந்தது, இப்போது, 6.50 வெள்ளி ஆக உயரந்துவிட்டது. இரண்டு வெள்ளியில் முன்பு இருந்த ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது லிட்டில் இந்தியாவில் 6.80 வெள்ளி வரை உயர்ந்துள்ளது.

“பச்சரிசியின் விலையும் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது,” என்று திருவாட்டி சீதாதேவி கூறினார்.

அடைமழைக் காலத்தின்போது பூக்களின் விளைச்சல் குறைவதால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக கல்யாணி பூக்கடை உதவியாளர் வனிதா ஸ்ரீராமன் கூறினார்.

“குறிப்பாக, மல்லிகைக்கும் முல்லைக்கும் இவ்வாண்டு தட்டுப்பாடு உள்ளது,” என்றார் அவர்.

கூட்டமும் விலையும் அதிகமாகவும் உள்ள நிலையில், பொருள் வாங்கும் அனுபவம் சற்று நெருக்கடியாக இருந்ததாகச் சொன்னார் தரவாய்வாளர் தாஷினி செல்லையா, 28.

“இயன்றவரை பேரம் பேசினேன். ஆயினும், இந்தப் பரபரப்பு ஒருவகையில் கொண்டாட்ட உணர்வைத் தருகிறது,” என்றார் திருவாட்டி தாஷினி.

குறிப்புச் சொற்கள்