தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் வெளிநாட்டுப் பயணமாக புருணை செல்லும் அதிபர் தர்மன் சண்முகரத்னம்

2 mins read
a2949ac0-1824-4d01-b244-a1d9912751c2
அதிபர் தர்மன் சண்முகரத்னம் - படம்: எஸ்பிஎச்

அதிபராகப் பதவியேற்ற பின் முதல் அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணம் செல்லும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜனவரி 24லிருந்து 26ஆம் தேதிவரை புருணைக்குப் பயணம் மேற்கொள்வார்.

புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் திரு தர்மன் அங்கு செல்கிறார். இது ஒருபுறம் இருக்க, அவரது மூன்று நாள் பயணம் சிங்கப்பூர், புருணைக்கு இடையே அரசதந்திர உறவுகள் ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் வந்துள்ளதாக ஜனவரி 15ஆம் தேதி வெவளியிடப்பட்ட அதிபர் அலுவலக அறிக்கை கூறுகிறது.

புருணை அரச மாளிகையில் அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படுவதுடன் அந்நாட்டு மன்னருடன் இருதரப்பு சந்திப்பிலும் அதிபர் தர்மன் கலந்துகொள்வார்.

மேலும், மன்னர், அவரது துணைவியார் கலந்துகொள்ளும் அரச விருந்துணவு நிகழ்ச்சியிலும் அதிபர் தர்மன் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருணையில் அதிபர் தங்கியிருக்கும்போது அவர் சிங்கப்பூர் ஆயுதப் படையினர் அங்கு மேற்கொண்டுவரும் பயிற்சியைக் காண்பார் என்றும் அங்குள்ள சிங்கப்பூரர்களைச் சந்திக்க விருந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதிபர் அலுவலகம் விளக்கியது.

அதிபருடன் அவரது துணைவியார் திருமதி ஜேன் இட்டோகி சண்முகரத்னம், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் வெளியுறவு அமைச்சருமான மாலிக்கி ஒஸ்மான், கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியம் ஜாஃபர், ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் ஆகியோரும் உடன் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிபர் அலுவலகம், வெளியுறவு, தேசிய வளர்ச்சி, கல்வி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் அதிபருடன் வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்றிருப்பர் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதிவரை அதிபர் பணிநிமித்தமாக சுவிட்சர்லார்ந்து செல்வார்.

அதிபரின் வெளிநாட்டுப் பயணத்தின் முதல் பகுதியாக அவர் ஜனவரி 16லிருந்து 18வரை உலகப் பொருளியல் கருத்தரங்கின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள டாவோஸ் செல்வார். அங்கு அவர் பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் உட்பட மூத்த வர்த்தக, தொண்டூழியத் தலைவர்களையும் சந்திப்பார்.

குறிப்புச் சொற்கள்