கால்நடைகளைப் போற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

உழவுத் தொழிலில் உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் விழா, சிங்கப்பூரில் ஜனவரி 16ஆம் தேதி கிளைவ் ஸ்திரீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.

தேக்கா பகுதியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக கொண்டுவரப்பட்ட விக்னேஷ் பால் பண்ணையைச் சேர்ந்த மாடுகள், மக்கள் பார்க்கும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அந்த மாடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும், சிறப்பு வழிபாட்டிற்கும் பொங்கல் வைத்து படைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் சூழ, மூன்று பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. படம்: லாவண்யா வீரராகவன்

மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பரிவட்டம் கட்டி, அலங்கரிக்கப்பட்ட மூன்று பானைகளில் பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தி, சங்கு ஊதி, பாரம்பரிய முறையில் இந்தக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் ரகுநாத் சிவா கூறுகையில், “இந்த ஆண்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன. வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமான இப்பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடும் வகையில், ஒவ்வோராண்டும் இவ்வாறு ஏற்பாடு செய்கிறோம். 500 முதல் 1,000 பேர் வரை இந்தக் கொண்டாட்டங்களைக் கண்டு ரசிப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

லி‌‌‌ஷா தலைவர் உள்ளிட்ட பலர் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். படம்: லாவண்யா வீரராகவன்

தன் மனைவி, இரு குழந்தைகளுடன் இந்தக் கொண்டாட்டத்தைக் கண்டுகளிக்க வந்த சத்திய சிவன், 34, “சிங்கப்பூரில் வேளாண்மையை நேரடியாகக் காணும் வாய்ப்பு பெரிதாக இல்லை. அதனால் குழந்தைகளுக்கு உணவு எங்கிருந்து வருகிறதே என்றே தெரியாமல் போகலாம். அப்படி இல்லாமல், சிறு வயதிலிருந்தே எங்கள் குழந்தைகளுக்கு உழவையும் அதற்கு உதவும் கால்நடைகளின் முக்கியத்துவத்தையும் அதற்கென தமிழர் நடத்தும் தனிப்பட்ட பண்டிகையையும் குறித்துச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம். அதனை அவர்கள் நேரடியாகக் கண்டு புரிந்துகொள்வதற்காக இங்கு அழைத்து வந்தேன்,” என்றார்.

திருவாட்டி துர்காஷினி, 31, கூறுகையில் “என் குழந்தைகளுடன் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது மகிழ்ச்சி. அவர்கள் இதன் மூலம் சில கலாசாரக் கூறுகளைக் கற்றுக் கொள்கிறார்கள்,” என்றார்.

தனது இரு வயதுக் குழந்தை ஆடு, மாடு, கன்றுகளைக் கண்டு துள்ளிக் குதித்து மகிழ்வதை ரசித்த தாயார் சுபாஷினி, “என் குழந்தைக்கு இந்தக் கொண்டாட்டம் குதூகலத்தைத் தந்துள்ளது. அவள் ஓடிச்சென்று மாடுகளைப் பார்த்து ரசிப்பதையும் அதன் மூலமாக ஒரு முக்கிய, பாரம்பரிய அடையாளப் பண்டிகையை காண்பதும் எனக்கு மனநிறைவைத் தருகிறது,” என்றார்.

விக்னேஷ் பால் பண்ணை உரிமையாளர் ஜி எஸ் மணியம், “நாங்கள் மாடுகளுடனே வாழ்கிறோம். ஆண்டு முழுவதும் மாடுகள் எங்களுக்காகவே உழைக்கின்றன. எங்களை ஆண்டு முழுதும் மகிழ்விக்கும் கால்நடைகளை ஒருநாள் நாங்கள் மகிழ்விக்கவும் அவற்றுக்கு எங்கள் நன்றியைச் சொல்லவும் இந்த விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்,” என்று கூறினார்.

மேலும், “இதனைத் தனியே செய்யாமல், லிஷா உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பொதுமக்கள் முன்னிலையில் செய்கிறோம். குறிப்பாக, கால்நடை பற்றியும் வேளாண்மை பற்றியும் அறிய அதிக வாய்ப்புகள் இல்லாத சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்க எங்கள் பங்களிப்பாக இதைக் கருதுகிறோம். இங்கு இதைக் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!