நாட்டின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் இணைய ஊடுருவல்

நாட்டின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் இணைய ஊடுருவல்

1 mins read
87791219-309a-4d84-92ca-2752d6c76250
இணையப் பாதுகாப்பு நிபுணர் பெருமாள் சுப்பிரமணியம், 38. - படம்: தற்காப்பு அமைச்சு

பட்டப்படிப்பு இறுதியாண்டின்போது மேற்கொண்ட இணையப் பாதுகாப்புத் தொடர்பான ஒரு பணித்திட்டம், தமது வருங்கால வேலையைத் தேர்ந்தெடுக்க கைகொடுத்ததாகக் கூறினார் கணினித்துறையில் பயின்ற பெருமாள் சுப்பிரமணியம், 38.

தொடக்கத்தில், இணையப் பாதுகாப்பு நிபுணராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய திரு பெருமாள், ஈராண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சீருடையில்லா அதிகாரியாக வேலையில் சேர்ந்தார்.

“பாதுகாப்புத் துறைக்காக என் திறன்களைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை ஆவலுடன் ஏற்றுக்கொண்டேன்,” என்றார் இவர்.

இணையப் பாதுகாப்பில் உள்ள பல்வேறு நிபுணத்துவங்களை நுணுகி ஆராயும் வாய்ப்பைப் பெற முடிந்த திரு பெருமாளுக்குத் தொடக்கம் சவால்மிக்கதாக இருந்தது.

“ஆயினும், குழு ஒத்துழைப்பாலும் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடிந்ததாலும் அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டேன்,“ என்றார், தற்போது டிஎக்ஸ்12 அதிகாரியாக உள்ள திரு பெருமாள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிடெக்ஸ் போன்ற பேரளவு இணையப் பாதுகாப்பு நடவடிக்கையில் பங்குபெறும் அரிய வாய்ப்பைப் பெற்றார் திரு பெருமாள்.

பல்வேறு இணைய ஊடுருவல்களை ஒரே நேரத்தில் நடத்தி, ராணுவத்தின் தற்காப்பு ஆற்றலைச் சோதிக்கும் குழுவில் இடம்பெற்ற இவர், வெவ்வேறு அமைப்பினருடன் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார்.

இந்த வேலையில் சவால்கள் இருந்தாலும் முடிவில் அது மனநிறைவு அளிப்பதாகத் திரு பெருமாள் சொன்னார்.

மற்ற அனைவரையும்போல, தாமும் வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையிலான சமநிலையைக் காண விரும்புவதாகவும் இவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்