தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

700 வீவக கார்ப் பேட்டைகளில்மின்னூட்டச் சாதனங்கள்

2 mins read
தோ பாயோ, பொங்கோலில் வேகமான மின்னூட்டச் சாதனங்கள்
a9be1d91-4b6a-4bd2-bfbe-8886e8754e13
தோ பாயோ எச்டிபி நடுவத்தில் புதிய மின்னூட்டச் சாதனங்களைத் தொடங்கிவைத்த மூத்த துணை அமைச்சர் ஏமி கோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மின்சார வாகனங்கள் அதிகரிக்கவும் அதற்குரிய வசதிகள் இருக்கவும் தீவு முழுவதும் மின்னூட்டச் சாதனங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 26 வீவக நகரங்களில் உள்ள ஏறக்குறைய 700 குடியிருப்புக் கார்ப் பேட்டைகளில் 2,400க்கும் மேற்பட்ட மின்னூட்டச் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் மின்சார வாகனமோட்டிகள் அதிக இடங்களில் மின்னேற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீவக வர்த்தக கார்ப்பேட்டைகளிலும் முதல் முறையாக மின்னூட்டச் சாதனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் டாக்சி, தனியார் வாடகைக் கார்கள், வர்த்தக வாகனங்களும் மின்னேற்றிக் கொள்ள முடியும்.

வேகமான மின்னூட்டச் சாதனங்களால் முப்பது நிமிடங்களிலேயே பாதி அளவுக்கு மின்கலன்களில் மின்னேற்ற முடியும்.

தோ பாயோவில் எச்டிபி நடுவம், பொங்கோலில் உள்ள ஓயிசிஸ் டெரசஸ் அக்கம்பக்க நிலையம் ஆகிய இரு வர்த்தக கார்ப்பேட்டைகளில் புதிய வேகமான மின்னூட்டச் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஜனவரி 18ஆம் தேதி எச்டிபி நடுவத்தில் வேகமான மின்னூட்டச் சாதனங்களை போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், இதர வீவக அக்கம்பக்க குடியிருப்புப் பேட்டைகளிலும் நகர மன்றங்களிலும் ஜெடிசி கார்ப்பரேஷன் தொழில்பேட்டைகளிலும் வேகமான மின்னூட்டச் சாதனங்கள் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றார்.

இது குறித்து வருகின்ற மாதங்களில் பொதுமக்களுக்கு மேல் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான டாக்டர் கோர், 2023ஆம் ஆண்டுக்குள் மூன்று வீவக பேட்டைகளில் ஒன்றில் மின்னூட்டச் சாதனங்களை அமைக்கும் இடைக்கால இலக்கை எட்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் இயந்திரங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிப்பதற்கு மின்னூட்டச் சாதனங்கள் அதிகரிப்பது முக்கியம். அடுத்த சில ஆண்டுகளில் எஞ்சிய கார்ப்பேட்டைகளில் மின்னூட்டச் சாதனங்கள் அமைக்கப்பட்டு மின்சார வாகனங்களுக்கான வசதி உறுதி செய்யப்படும் என்று டாக்டர் ஏமி கோர் மேலும் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்குள் 2,000 வீவக கார்ப்பேட்டைகளில் குறைந்தது 12,000 மின்னூட்டச் சாதனங்களை அமைப்பது அரசாங்கத்தின் இலக்காகும்.

குறிப்புச் சொற்கள்