தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப் பொருள் இல்லா 2024ஐ உருவாக்குவோம்: ஃபைஷல் இப்ராஹிம்

2 mins read
8d073170-4c95-465d-84e3-17df218483c1
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கேலாங்கில் நடத்திய திடீர் சோதனையில் கலந்துகொண்ட உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சிங்கப்பூரின் பல இடங்களில் திடீர் சோதனைகள் நடத்திவருகிறது.

இவ்வாண்டு கேலாங்கில் ஒரு கரவோக்கே நிலையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையை நேரில் காண வந்தார் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம்.

அப்போது அவர் போதைப் பொருள் ஒழிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

“நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு நலமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்த, நாம் சமுதாயமாக போதைப் பொருள்களைக் குறித்து தீர்க்கமான, வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

“அவ்வகையில், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இதுபோன்ற திடீர் சோதனைகளும் நடவடிக்கைகளும் மிக முக்கியமானவை. பொதுமக்களும் அவற்றுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

“போதைப் பொருள் உட்கொள்பவர்களுக்கும் கடத்துபவர்களுக்கும் எதிராக சிங்கப்பூர் கடுமையான நடவடிக்கை எடுத்துவரும்.” என நினைவுறுத்தினார் இணைப் பேராசிரியர் ஃபைஷல்.

திடீர் சோதனைகளுக்குக் கைகொடுக்கும் உமிழ்நீர் சோதனைக் கருவி

சென்ற ஆண்டு ஜனவரியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிமுகப்படுத்திய உமிழ்நீர் சோதனைக் கருவி, திடீர் சோதனைகளிலும் சோதனைச் சாவடிகளிலும் சாலைத் தடுப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்மூலம், ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளாரா என்பதைப் பத்து நிமிடத்திற்குள் அந்த இடத்திலேயே அதிகாரிகளால் கண்டறிய முடிகின்றது. கூடுதலான நபர்களை ஒரே நேரத்தில் விரைவாகச் சோதிக்கவும் முடிகின்றது.

ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதாக சோதனை முடிவில் தெரியவந்தால், அவர் அடுத்தகட்ட சோதனைகளுக்காக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.

இக்கருவி உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் சோதிக்கப்பட்டுள்ளது.

“இக்கருவிகளை எளிதாகப் பயன்படுத்த முடிகின்றது. எளிதில் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடிகின்றது. அதனால் நம் அதிகாரிகளின் செயல்பாட்டை விரைவாக்குகிறது,” என்றார் இணைப் பேராசிரியர் ஃபைஷல்.

2023க்கான போதைப் பொருள் புழக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வரும் நாள்களில் வெளியாகும்.

குறிப்புச் சொற்கள்