கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம், 185 நிறுவனங்களில் இயக்குநராக, செயலாளராக, பங்குதாரராக பதவி வகித்த ஆடவரின் தகுதிநிலையை ரத்து செய்துள்ளது.
ஜனவரி 19ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வாங் ஜுன்ஜி என்பவரின் ‘ஆர்எஃப்ஏ’ என்ற பத்திரப் பதிவு முகவர் தகுதி, ‘எல்டபிள்யூபிசி’ என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றுடன் வாங் ஜுன்ஜியின் பதவி வகிக்கும் தகுதிநிலை ஆகியவை வியாழக்கிழமை (ஜனவரி 18) அன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பில் தான் மேற்கொண்டுவரும் விசாரணையின் ஒரு பகுதி இது என்று ஆணையம் வர்ணித்தது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் குறைந்தது $2.8 பில்லியன் ரொக்கம், சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜுன்ஜி செயலாளர், இயக்குநர், பங்குதாரராக செயல்படத் தகுதிநிலை பெற்றுள்ள ஆடவர் என்றும் அவர் எல்பிடபிள்யூசி நிறுவனத்தின் இயக்குநர் என்றும் ஆணையம் விளக்கியது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஆணையம் அவரது பதிவுகளை ரத்து செய்ததாக அது கூறியது.
வாடிக்கையாளர் ஒருவர் நேரில் முன்னிலையாகாத போது அவர் நிறுவனத்தில் பொறுப்பு வகிக்கும் நிலைக்கு தகுதியானவர்தானா என முறையான ஆய்வு செய்யத் தவறியது எல்டபிள்யூபிசி நிறுவனம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மீறிய செயல்களில் ஒன்று என ஆணையம் தெரிவித்தது.
“இயக்குநர், செயலாளர், பங்குதாரராக பதவி வகிக்க தகுதிநிலை பெற்றிருந்த வாங், எல்டபிள்யூபிசி நிறுவன ஊழியர்கள் தங்கள் கடமையை ஆற்றுகின்றனரா என்று கண்காணிக்காததால் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. அதனால், அவர் தனது தகுதிநிலையை இழந்துவிட்டார் என்றும் ஆகையால் அவரது தகுதிநிலை ரத்து செய்யப்பட்டது,” என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.

