அரசாங்கம் - மக்கள் அணுக்கத்தைவலுப்படுத்த புதிய அலுவலகம்

அரசாங்கம் - மக்கள் அணுக்கத்தைவலுப்படுத்த புதிய அலுவலகம்

2 mins read
f48bc3fc-0374-47bf-baf0-e9421780ccd7
சிங்கப்பூர் அரசாங்க பங்காளித்துவ அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தற்போது சிங்கப்பூர் அரசாங்க பங்காளித்துவ அலுவலகம் (எஸ்ஜிபிஒ) திறக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் - மக்கள் இடையே பங்காளித்துவத்தை விரிவுபடுத்தி வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

அரசாங்கத்துடன் மக்கள் மற்றும் குழுக்களை இணைக்கவும் நிதி உதவிகளுக்கு வழிகாட்டவும் ஒத்துழைப்புக்கான அதிக வாய்ப்புகளை அரசாங்கம், அமைப்புகளிடம் அடையாளம் காணவும் இந்த அலுவலகம் முன்னோடியாகத் திகழும்.

அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஆலோசனைகளை மக்கள் வழங்கவும் இந்த அலுவலகம் வாய்ப்பு அளிக்கிறது.

சிங்கப்பூர் மிகவும் சிக்கல் நிறைந்த உலகை எதிர்நோக்கியுள்ளது. சமூக ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஏற்படக்கூடிய எதிரான விளைவுகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மக்கள் எளிதில் அணுகும் வகையில் இந்த அலுவலகம் செயல்படும்.

நாட்டு நிர்மாணத்தின் அடுத்தக் கட்டமாக, அரசாங்கமும் மக்களும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவது சிங்கப்பூர் மேலும் பல சாதனைகளை அடைய உதவும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

இத்தகைய பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது முன்னேறும் சிங்கப்பூர்த்’ திட்டத்தின் இயக்கத்தின் முக்கிய சமூக இலக்காகும். அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“நாம் விரும்பும் எதிர்கால சிங்கப்பூரை உருவாக்குவது பொதுவான இலக்காக உள்ளது. இதனை சிங்கப்பூரர்களின் அனுபவம், நிபுணத்துவத்தால் சாதிக்க முடியும்,” என்று திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனவரி 19 ஆம் தேதி அன்று டேங் பிளாசாவில் நடைபெற்ற புதிய அலுவலகத் திறப்பு விழாவில் அவர் பேசினார்.

“நாம் பங்காளிகளாக இணைந்து செயல்படும்போது இன்னும் பலவற்றைச் செய்ய முடியும் என்பதே இதன் முக்கிய அம்சம்,” என்று துணைப் பிரதமர் கூறினார்.

இதே நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரான எட்வின் டோங், ‘எஸ்ஜிபிஒ’ அலுவலகம் மக்கள்-அரசாங்கம் இடையிலான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் வலுப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

பங்காளித்துவத்துக்கான முக்கிய அரசாங்க வளங்கள், நிதியுதவி, தொண்டூழிய வாய்ப்புகளை புதிய அலுவலகம் நிர்வகிக்கும்.

மக்களும் தங்கள் யோசனைகளை எஸ்ஜிபிஒ இணையத்தளத்தின் பங்காளித்துவ தளங்களில் பதிவு செய்யலாம்.

யோசனைகள் பின்னர் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதரவு வழங்கப்படும்.

புதிய அலுவலகம், ஒத்த எண்ணம் கொண்டவர்களையும் அமைப்புகளையும் இணைத்து வளங்களுக்கு வழிகாட்டி உதவும்.

அதுமட்டுமல்லாமல் குடிமக்கள், அர்த்தமுள்ள வகையில் பங்காற்றுவதற்கான பல துறைகளை அடையாளம் காண அரசாங்க அமைப்புகளுடன் அது நெருக்கமாக பணியாற்றுவதோடு அது தொடர்பான வாய்ப்புகளைப் பிரபலப்படுத்தும்.

குறிப்புச் சொற்கள்