பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள எம்ஆர்டி கட்டுமானத் தளத்தில் போடப்பட்டிருந்த இரைச்சல் தடுப்புப் பலகைகள் உடைந்ததால் கட்டுமானப் பணிகள் இடைக்காலமாக நிறுத்தப்பட்டன.
இயந்திரம் மோதியதால் தடுப்புப் பலகைகள் உடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் அறிய முற்பட்டபோது, ஜனவரி 16ஆம் தேதி ஐந்து மணியளவில் சம்பவ இடத்தில் விபத்து நிகழ்ந்தது என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கட்டுமானத் தளத்தில் பொருள்களை அள்ளும் சாதனம் சாய்ந்து தடுப்புப் பலகைகள் மீது மோதியது. இதில் சில தடுப்புப் பலகைகள் உடைந்துவிழுந்தன.
சம்பவ இடத்திலிருந்து தடுப்புப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பொறியியல் நிபுணர்கள் எஞ்சிய பலகைகளின் உறுதியை பரிசீலித்து வருவதாகவும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 21 புளோக் 208லிருந்து சில மீட்டர் தொலைவில் நான்கு மாடி உயரத்திற்கு தடுப்புப் பலகைகள் நிறுவப்பட்டிருந்ததாக ஜனவரி 18ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் ஷின் மின் டெய்லி தெரிவித்திருந்தது.
“விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அருகில் இருந்த வீவக புளோக்குக்கு சேதம் ஏற்படவில்லை,” என்று ஆணையம் மேலும் கூறியது.

