ஈஸ்வரன் விவகாரம் மசெகவுக்கு பலத்த அடி, ஆனாலும் நம்பிக்கை மீட்கப்படலாம்: அரசியல் கவனிப்பாளர்கள்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் முடிவு எப்படியிருந்தாலும் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) இது ஓர் அரசியல் பின்னடைவு என்று அரசியல் கவனிப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சி எப்படி அதன் தனிமுத்திரையை மீண்டும் கட்டியெழுப்புகிறது என்பது, அடுத்த தேர்தலுக்கு முக்கியமானதாக இருக்கும். இது குறிப்பாக, சென்ற தேர்தலில் கடுமையான போட்டியை எதிர்கொண்ட, ஈஸ்வரன் தலைமை தாங்கிய வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்குப் பொருந்தும்.

ஹோட்டல் உரிமையாளர் ஓங் பெங் செங்கிடமிருந்து $380,000க்கும் அதிகமான மதிப்புள்ள சலுகைகளை லஞ்சமாகப் பெற்றதாகவும், நீதித் துறை செயல்பாட்டுக்கு இடையூறாக இருந்ததாகவும் ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் விசாரணை தொடர்பான 27 குற்றச்சாட்டுகள் ஜனவரி 18ஆம் தேதி அவர் மீது சுமத்தப்பட்டன.

ஊழல் குறித்த மக்கள் செயல் கட்சியின் (மசெக) நிலைப்பாடு பேரத்துக்கு அப்பாற்பட்டது என்றும் அது மசெக மரபணுவின் ஒரு கூறு போன்றது எனவும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அதே நாளில் கூறினார்.

இருந்தபோதும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டது, அக்கட்சிக்கு அரசியல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

“அரசியல் தளத்தில், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு திரு ஈஸ்வரனை விசாரிப்பது தெரியவந்த மாதங்களிலேயே அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுவிட்டது,” என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் ஜிலியன் கோ கூறினார்.

“வழக்கின் சட்ட நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிகம் பேச விரும்பாவிட்டாலும், அரசியல் ரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால் இது நம்பிக்கை துரோகமாகும்,” என்றார் அவர்.

அவரும் மற்றக் கவனிப்பாளர்களும், மசெக தலைவர்கள் உயர் தரத்திலான நேர்மை, நன்னடத்தையை நிலைநிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.

ஈஸ்வரன் பெற்ற பொருள்கள் ஊழல் என்று சொல்லக்கூடியதோ, இல்லையோ அது வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கிஃப்லி பஹாருடின் சுட்டிக்காட்டினார்.

தனியார் ஜெட் விமானத்தில் சவாரி, சொகுசு ஹோட்டல் தங்கும் வசதி, இசை நிகழ்ச்சிகளுக்கும் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளுக்கும் நுழைவுச்சீட்டுகள் உள்ளிட்டவற்றை ஈஸ்வரன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

“எந்தத் தவறும் நடந்திருக்காவிட்டாலும். அமைச்சர்கள் இதுபோன்ற ஆடம்பரமான விஷயங்களை அனுபவிப்பது, பொது மக்கள் பார்வையில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் திரு ஸுல்கிஃப்லி.

ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள், அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் 2015ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

“இதற்குமுன் முறையற்ற வகையில் நடந்ததாகக் கூறப்படுவது சட்ட அமலாக்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்படாதது ஏன் என்பது குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது,” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அரசியல் ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் சோங் ஜா இயன் கூறினார்.

மற்றொரு விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின்போது 2023ல்தான் இப்பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்வரனின் நீதிமன்ற வழக்கு மசெகவின் தலைமைத்துவ மாற்றத் திட்டங்களையோ அடுத்த பொதுத் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ள காலத்தையோ பாதிக்காது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய நான்கு அரசியல் கவனிப்பாளர்களும் கூறினர். ஏனெனில், ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் 2025 நவம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.

“சட்டப் பிரச்சினை அதன் காலவரம்பைக் கொண்டிருக்கும், ஆனால் அரசியல் பொறுப்புடைமை இப்போதே சிறந்த முறையில் கையாளப்படும்,” என்று டாக்டர் கோ கூறினார்.

ஆனால் கட்சித் தலைமைக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் பலத்தை எவ்வாறு உயர்த்துவது என்பதாக இருக்கலாம் என்று சோலாரிஸ் ஸ்ட்ரெட்டிஜிஸ் சிங்கப்பூரின் மூத்த அனைத்துலக விவகார ஆய்வாளர் டாக்டர் முஸ்தஃபா இசுதீன் கூறினார்.

2020 பொதுத் தேர்தலில் குறுகிய வாக்குவித்தியாசத்தில், 51.68 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஐந்து உறுப்பினர் தொகுதியை மசெக வென்றது. ஈஸ்வரன் தலைமையிலான அதன் குழு, டாக்டர் டான் செங் போக் தலைமையிலான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி குழுவை எதிர்த்தது.

அடுத்த தேர்தலில் அந்தத் தொகுதி கவனிக்கப்படும் இடமாக இருக்கும் என்று டாக்டர் முஸ்தஃபா குறிப்பிட்டார்.

“1997 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றியதன் மூலம் தொகுதியின் சமூக - அரசியல் இதயத் துடிப்பாக இருக்கிறார். வெஸ்ட் கோஸ்ட் தொகுதி அவரது மரபணுவில் உள்ளது,” என்று ஈஸ்வரனைப் பற்றி அவர் கூறினார்.

அரசியல் ரீதியாக கட்சி அடிவாங்கிய போதிலும், இதுபோன்ற ஒற்றை நிகழ்வுகள் அரிதாகவே தேர்தல்களைத் தீர்மானிக்கின்றன என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

“தற்போது பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், மக்கள் செயல் கட்சி அதன் முக்கிய கொள்கைகளுக்கும் நெறிமுறைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். அத்துடன் கடந்தகால சாதனைகள் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும். மேலும் மக்களிடையே வெளிப்படையாக இருக்க வேண்டும்,” டாக்டர் முஸ்தஃபா இசுதீன் கூறினார்.

“சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை மசெக மீண்டும் பெறுவதற்கு எந்த ஒரு தனிமனிதரையும்விட கட்சி பெரியது என்பதை நிரூபிக்க வேண்டும்,” என்றார் அவர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!