பூச்சிகளை உணவு வகையில் சேர்க்கும் திட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்

2 mins read
fc8bd1d1-3226-4baf-9b16-fc88aec424d0
ஃபியூச்சர் புரோட்டின் சொலுஷன்ஸ் என்ற அமைப்பு கிரிக்கெட் பூச்சி குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. - படம்: ஃபியூச்சர் புரோட்டின் சொலுஷன்ஸ்

பூச்சி வகைகளை உணவாக சேர்க்கும் திட்டத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்களிடையே விரக்தி மனப்பான்மை தோன்றி யுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சில நிறுவனங்கள் மூடி விடலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடியதாக 16 பூச்சி வகைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு 2023ஆம் ஆண்டின் பிற்பாதியில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

மனித உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய 16 வகை உணவாக, கிரிக்கெட் பூச்சி, பட்டுப் பூச்சி, வெட்டுக்கிளி ஆகியவற்றை உணவு அமைப்பு அடையாளப்படுத்தியது. ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உணவு, வேளாண் அமைப்பு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய புரதச் சத்து உள்ள உணவை மேம்படுத்த ஊக்குவித்துள்ள நிலையில் சிங்கப்பூர் உணவு அமைப்பு அந்த 16 வகைப் பூச்சிகளுக்கு அனுமதி வழங்க உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இதில் கிரிக்கெட் பூச்சி புரதச் சத்து, ஊட்டச் சத்து, நார் சத்து போன்றவற்றை அதிகம் கொண்டுள்ளதால் அது உயர் ஊட்டச் சத்து உணவாகக் கருதப்படுகிறது.

ஜனவரி 19ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு, அந்தப் பூச்சி வகைகளுக்கு அனுமதி வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகள் சில பூச்சி வகைகளை உண்ண அனுமதி வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது

அனுமதி வழங்க ஏற்பட்டுள்ள கால தாமதத்துக்கு என்ன காரணம், அனுமதி எப்போது வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம், பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப்படுமா என்ற கேள்விகள் உணவு அமைப்பிடம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு பதிலளித்த அமைப்பின் பேச்சாளர், தமது அமைப்பு இதுகுறித்த விவரங்களை இறுதி செய்துவருவதாகவும் சமயம் வரும்போது அறிவிப்பு வரும் என்றும் கூறினார்.

“உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பூச்சி வகை உணவை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதையும் நாங்கள் அறிவோம். அவர்களுக்கு உதவி வழங்கும் விதத்தில் அவர்களுடன் தொடர்புகொள்வோம்,” என்று அந்தப் பேச்சாளர் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்