ஆடையின்றி, கத்தியுடன் இருந்த ஆடவரைக் காவல் துறை கைது செய்தது

ஆடையின்றி, கத்தியுடன் இருந்த ஆடவரைக் காவல் துறை கைது செய்தது

1 mins read
433c0ea0-b698-4780-8372-76b01099ab72
நடைபாதை மேற்கூரையில் ஒளிந்திருந்த ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் பிடிக்க முயன்றனர். - படம்: ஷின் மின் டெய்லி நியூஸ்

ஆடையின்றி, கத்தியுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் இருக்கும் நடைபாதையின் மேற்கூரையில் ஏறி நின்ற ஆடவரை காவல்துறையினர் சனிக்கிழமை (ஜனவரி 20) கைது செய்தனர்.

பின்னர் அந்த 49 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று இரவு சுமார் 8.05 மணிக்கு உதவி கேட்டு ஹவ்காங், புளோக் 623லிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக காவல் துறை கூறியது.

இதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அந்த ஆடவர் பொது வெளியில் கத்தியுடன் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அந்த ஆடவர் ஹவ்காங் அவென்யூ 2, புளோக் 623ல் உள்ள தமது இல்லத்துக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

அவரது வீட்டுக்குள் நுழைய காவல் துறையினருக்கு அவர் அனுமதி மறுத்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் அவர் இறைச்சி வெட்டும் கத்தி, சமையல் உணவு பொரிக்கப் பயன்படுத்தும் சட்டி ஆகியவற்றுடன் சமையல் அறையிலிருந்து கூரையுடன் கூடிய நடைபாதையின் மேற்கூரையில் ஏறியதாக அறியப்படுகிறது. அவர் ஆடையின்றி காணப்பட்டதாக காவல் துறை கூறுகிறது.

மூன்று மணிநேர இழுபறிக்குப் பின் அந்த ஆடவரை காவல் துறையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த ஆடவர் நடைபாதையின் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்