ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருது: ஜனவரி 22லிருந்து பிப்ரவரி 4 வரை வாக்களிப்பு

4 mins read
0c6a07f9-912f-4979-a285-d35c01569d95
2023ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ள (மேல் வரிசை இடமிருந்து) சாந்தி பெரேரா, ஜெரல்டின் லீ, ரொனிட்டா பால், ஹனி இஸ்னின் ரசின். (கீழ் வரிசை இடமிருந்து) ப்ரிசிலா ஓங், செங் ருயி ஜியே, சேண்டி கோ சியூ ஹுவா, ஹெர்மன் சிங். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கும் 2023ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்கான வாக்களிப்பு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

str.sg/soty23vote எனும் இணையத்தளத்துக்குச் சென்று பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

வெற்றியாளரை அறிவிக்கும் நிகழ்வு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விருது வழங்கும் விழா, ஒன்பதாவது முறையாக நடத்தப்படுகிறது.

சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிங்கப்பூரர் அல்லது சிங்கப்பூரர்களை இந்த விருது அடையாளம் காண்கிறது.

அத்துடன், உலக அரங்கில் சிங்கப்பூருக்கு நற்பெயர் தேடித் தரும் அல்லது விடாமுயற்சியுடன் செயல்பட்டு கடும் சவால்களை முறியடிக்கும் சிங்கப்பூரர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்காக முன்மொழியப்பட்டவர்களில் கடந்த ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சிங்கப்பூருக்காக தங்கப் பதக்கம் வென்ற சாந்தி பெரேராவும் ஒருவர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய திடல்தடப் போட்டிகளிலும் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் அவர் தங்கம் வென்றார்.

உலகத் திடல்தடப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமையும் சாந்தியைச் சேரும்.

இவ்வாண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி போட்டியிடுகிறார்.

முன்னாள் தாதி ரொனிட்டா பாலும் தொண்டூழியர் ஒருங்கிணைப்பாளர் ஜெரல்டின் லீயும் விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ளனர்.

இருவரும் சேர்ந்து 2011ஆம் ஆண்டில், புற்றுநோயாலும் மற்ற வகை கொடிய நோய்களாலும் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தைத் திறந்தனர்.

உணவு அங்காடி நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஹனி இஸ்னின் ரசினும் விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ளார்.

பணவீக்கம் காரணமாகப் பெரும்பாலான கடைகள் உணவின் விலையை உயர்த்தியிருக்கும் நிலையில் திருவாட்டி ஹனி தாம் விற்கும் உணவுவகைகளின் விலையைக் குறைத்துள்ளார்.

வெறும் $2.50க்கு ஜாலான் குக்கோ குடியிருப்பாளர்கள் வயிறார சாப்பிடுவதை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.

ஜாலான் குக்கோ வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவ திருவாட்டி ஹனி இவ்வாறு செய்தார்.

ஆகச் சிறந்த சிங்கப்பூரர் விருதுக்காக முன்மொழியப்பட்டவர்களில் தளவாட இயக்குநர் ஹெர்மன் சிங்கும் ஒருவர்.

அறிமுகம் இல்லாத ஒருவருக்கு திரு சிங் தமது கல்லீரலில் பெரும்பகுதியை (67 விழுக்காடு) தானம் செய்தார்.

கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் கல்லீரல் தானத்துக்காக சிங்கப்பூரர்கள் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கல்லீரல் தானத்துக்காக சராசரியாக ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது.

அதற்கு முன்பு சிலர் உயிரிழந்துவிடுகின்றனர்.

45 வயது திரு சிங்கின் தந்தை இறுதிக்கட்ட பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

அவரை திரு சிங் பார்த்துக்கொண்டு அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்தார்.

வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்த திரு சிங், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர் தமக்கு அறிமுகமில்லாதவராக இருந்தாலும் அவருக்கு உதவி செய்ய உறுதி பூண்டார்.

வாரயிறுதிகளிலும் திரு சிங் தொண்டூழியத்தில் ஈடுபடுகிறார். உதவி தேவைப்படுவோருக்கு ரொட்டி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை விநியோகம் செய்வது, ரத்த சுத்திகரிப்பு செய்துகொள்ளும் நோயாளிகளுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது, கடற்கரைகளைச் சுத்தம் செய்வது ஆகியவற்றை அவர் செய்து வருகிறார்.

2011ஆம் ஆண்டிலிருந்து பிடோக் ரெசர்வோர் வட்டாரத்தில் சமூகத் தொண்டூழியராக இருந்து வரும் திருவாட்டி சேண்டி கோ சியூ ஹுவாவும் விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ளார்.

உதவி தேவைப்படுவோர் பலனடைய வேண்டும் என்ற நோக்கில் அவர் பல திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இலவச உணவுவகைகளை விநியோகம் செய்வது, இலவச துணைப்பாடங்களுக்கு ஏற்பாடு செய்வது, உதவி தேவைப்படுவோருடன் தொண்டூழியர்களை இணைத்து வைப்பது ஆகிய நடவடிக்கைகளை திருவாட்டி கோ மேற்கொண்டு வருகிறார்.

12 வயது செங் ருயி ஜியேவும் விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ளார்.

அவர் 9 வயதாக இருந்தபோது முதல்முறையாக நிதி திரட்டு முயற்சியில் இறங்கினார்.

அதன்மூலம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைக்காசு நிதிக்கு $56,000 திரட்டினார்.

குமாரி செங், இதுவரை இணையம் மூலம் 60 நிதி திரட்டுத் திட்டங்களை நடத்தியுள்ளார்.

அவற்றின்மூலம் அவர் $1.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளார்.

அந்த நிதி, விலங்கு வதைத் தடுப்புச் சங்கம், அசிசி அந்திமகால நிலையம் போன்றவற்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் குழந்தைப் பராமரிப்பு ஆசிரியரான ப்ரிசிலா ஓங்கும் விருதுக்காக முன்மொழியப்பட்டுள்ளார்.

தாம் பணிபுரிந்த பாலர் பள்ளியில் வசதி குறைந்த குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்க 2014ஆம் ஆண்டில் திருவாட்டி ஓங் அறநிறுவனம் ஒன்றை அமைத்தார்.

ஆனால் விபத்து காரணமாக அவரால்  தற்போது முன்புபோல அவ்வளவாக நடமாட முடியாதபோதும் வசதி குறைந்தோருக்கு உணவு வழங்கும் ‘புரோஜெக்ட் லவ் லஞ்ச்’ திட்டத்தை அவர் மும்முரமாக நடத்தி வருகிறார்.

முழுநேர தொண்டூழியரான 41 வயது திருவாட்டி ஓங், ஈசூன் மற்றும் செங்காங்கில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 400 குறைந்த வருமான குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றி வருகிறார்.

முதியோருக்கான மருத்துவச் செலவுகள், மருத்துவரைச் சென்று பார்க்கத் தேவையான போக்குவரத்து ஆகியவற்றுக்காக அவசரநிலை நிதி ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்