‘சிம்ப்ளிகோ’ தளத்துக்கு முழுமையாக மாறும் திட்டம் கைவிடப்பட்டது

‘சிம்ப்ளிகோ’ தளத்துக்கு முழுமையாக மாறும் திட்டம் கைவிடப்பட்டது

3 mins read
a3f753a1-5201-42cd-a65a-9dc6c5f63956
எம்ஆர்டி நிலையத்தில் உள்ள இசி-லிங்க் அட்டை நிரப்பும் இயந்திரத்துக்கு அருகில் சிம்ப்ளிகோ தளத்துக்கு மாறும் விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பொதுப் போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்த சிம்ப்ளிகோ தளத்துடன் சேர்த்து பெரியோருக்காக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கட்டண அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துகளை ஏற்று சிம்ப்ளிகோ தளத்துக்கு முழுமையாக மாறும் திட்டம் கைவிடப்பட்டதாக ஜனவரி 22ஆம் தேதியன்று அதிகாரிகள் கூறினர்.

பெரியோருக்கான ஈசி-லிங்க் அட்டைகளை ஜூன் மாதம் 1ஆம் தேதிக்குள் புதுப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பெரியோருக்கான கட்டணத்தைச் செலுத்த நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பேருந்து, ரயில் சேவைக் கட்டணங்களைச் செலுத்த ஜூன் 1ஆம் தேதிக்குள் நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளுக்குப் பதிலாக நெட்ஸ் பிரீபேட் அட்டைகளுக்கு மாற்றிக்கொள்ளத் தேவையில்லை.

பயணிகள் தொடர்ந்து ஈசி-லிங்க், நெட்ஸ் ஃபிளாஷ்பே ஆகிய அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்த கூடுதலாக $40 மில்லியன் செலவழிக்கப்படும் என்று ஜனவரி 22ஆம் தேதியன்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்துவதற்குத் தேவையான இயந்திரங்களை மாற்றவும் பராமரிக்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

“பெரியோருக்காகத் தற்போது பயன்பாட்டில் உள்ள அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை நீட்டிக்க முடிவெடுத்துள்ளோம். அட்டைகள் மூலம் பொதுப் போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்தும் முறையை முடிவுக்குக் கொண்டு வர முதலில் வகுத்த திட்டம் கைவிடப்படுகிறது,” என்று திரு சீ தெரிவித்தார்.

சிம்ப்ளிகோ தளத்துக்கு முழுமையாக மாறும் திட்டம் குறித்து ஜனவரி 9ஆம் தேதியன்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்ததை அடுத்து, அது குறித்து பயணிகள் பலர் அக்கறை தெரிவித்ததாக அவர் கூறினார்.

இதன் காரணமாகவே சிம்ப்ளிகோ தளத்துக்கு முழுமையாக மாறும் திட்டம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சிம்ப்ளிகோ தளம் மூலம் பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்தும்போது பேருந்துகள் அல்லது எம்ஆர்டி ரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும்போது கட்டண அட்டையிலிருந்து கழிக்கப்படும் தொகையையும் அட்டையில் மீதம் உள்ள தொகையையும் பார்க்க முடியாது என்று பெரும்பாலானோர் அக்கறை தெரிவித்தனர்.

ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து பழைய ஈசி-லிங்க் அட்டைகளை சிம்ப்ளிகோ தளத்துக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அமைச்சர் சீ மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

சிம்ப்ளிகோ தளத்துக்கு முழுமையாக மாறும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்ட மறுநாள் பலர் அதன் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முயன்றதாகவும் அதன் காரணமாக அதில் இருக்கும் சில அம்சங்களைச் சிலரால் பயன்படுத்த முடியாமல் போனதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்திருந்தது.

எம்ஆர்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் உள்ள பயண அட்டை அலுவலகங்களில் தங்கள் ஈசி-லிங்க் அட்டைகளை சிம்ப்ளிகோவுக்கு மாற்ற பயணிகள் சிரமப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 9ஆம் தேதிக்கும் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிம்ப்ளிகோ அம்சங்களுடனான ஈசி-லிங்க் அட்டைகளை வாங்கியவர்கள் விருப்பப்பட்டால், பழைய அணுகுமுறையைப் பயன்படுத்தும் அட்டைகளுக்கு அவற்றை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.

இதுகுறித்து மேல் விவரங்கள் பிப்ரவரி இறுதிக்குள் வெளியிடப்படும்.

மாணவர்கள், மூத்தோர் என சலுகைக் கட்டண அட்டைகளை வைத்திருப்பவர்களும் சிம்ப்ளிகோ அம்சம் இல்லாத அட்டைகளுக்கு மாறிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்