தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைவீடு சந்தை நிலவரம் மெதுவடைந்தது; விலை குறைப்புக்கு உரிமையாளர்கள் தயார்

2 mins read
13d43a03-daee-4cae-850e-0ee7af512a73
கடைவீடுகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுறுசுறுப்பாக இருந்த கடைவீடு விற்பனைச் சந்தை தற்பொழுது மெதுவடைந்துள்ளது. நடந்து முடிந்த 2023ஆம் ஆண்டில் $1.14 பில்லியனுக்கு 131 கடைவீடுகள் கைமாறின. ஒப்புநோக்க, 2022ஆம் ஆண்டு $1.6 பில்லியனுக்கு 191 கடைவீடுகள் கைமாறின.

இதுபற்றி புரோப்நெக்ஸ் கூறுகையில், 2019ஆம் ஆண்டு 123 கடைவீடுகள் $916 மில்லியனுக்கு கைமாறிய பிறகு இதுவே ஆகக் குறைவான விற்பனை அளவு என்று சொத்து சந்தை தொடர்பில் ‘கேவியட்’ எனப்படும் தடுப்பு நடவடிக்கை தகவல்களை மேற்கோள் காட்டி தெரிவித்தது. கேவியட் என்பது சிங்கப்பூர் நில ஆணையத்திடம் சொத்து தொடர்பாக அதை வாங்குபவர்கள் தாக்கல் செய்யும் சட்ட உரிமை கோரும் ஆவணம்.

2023ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் $95 மில்லியன் பெறுமானமுள் வெறும் 15 கேவியட் பத்திரங்களே தாக்கல் செய்யப்பட்டதாக அது கூறியது. ஒப்புநோக்க, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 37 சொத்துகள் வாங்க பதிவு செய்யப்பட்டதாக புரோப்நெக்ஸ் விளக்கம் அளித்தது. இதுவே 2010ஆம் ஆண்டுக்குப் பின் ஆகக் குறைவான சொத்து விற்பனை என்றும் புரோப்நெக்ஸ் அறிக்கை கூறுகிறது.

2023 அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையிலான விற்பனை, 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 70% அளவு வீழ்ச்சியடைந்தது. 2023 கடைசிக் காலாண்டில் விற்பனையான சொத்துகள் குறைவான மதிப்புடையவை என்று புரேப்நெக்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆய்வுப் பிரிவின் தலைவர் வோங் சியூ யிங் கூறினார். அத்துடன், மந்தமான பொருளியல் நிலவரம், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு எதிரான நடவடிக்கைகளின் அதிகரிப்பும் காரணம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்