நியூகாசல் யுனைடெட்டை வாங்கும் முயற்சியுடன் தொடர்புடைய நெல்சன் லோ மீது மேலும் 58 குற்றச்சாட்டுகள்

2 mins read
f908d572-e29c-4b92-baa9-78c61da84501
நெல்சன் லோ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நொவீனா குளோபல் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் இணை நிறுவனரான நெல்சன் லோ நி லூன் மீது கூடுதலாக 58 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மொத்தம் 60 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது, மோசடியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

நொவீனா குளோபல் சுகாதாரப் பராமரிப்புக் குழுகத்தை நெல்சன் லோவும் அவரது உறவினர் டெரன்ஸ் லோவும் நிறுவினர்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் களமிறங்கும் நியூகாசல் யுனைடெட் குழுவை 280 மில்லியன் பவுண்டுக்கு (S$460 மில்லியன்) வாங்க 2020ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் முயன்றனர்.

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 2022ஆம் ஆண்டில் 44 வயது லோ மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டில் போலி நிதி அறிக்கைகளை அவர் சமர்ப்பித்து வங்கிகளிடமிருந்து $18 மில்லியன் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

தமது ஊழியர் வோங் சீன் யுவுடன் இணைந்து ஆறு வங்கிகளை ஏமாற்ற லோ சதித் திட்டம் தீட்டியதாக நம்பப்படுகிறது.

மேபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டிபேங்க், டிபிஎஸ், யுஓபி, எச்எஸ்பிசி ஆகிய வங்கிகள் பாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

44 வயது வோங் மீது கூடுதலாக 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

லோவும் வோங்கும் ஓராண்டுக்கு மேலாக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 24ஆம் தேதியன்று அவர்கள் இருவரும் காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணையின்போது இருவரும் பேசவில்லை. தங்கள் பெயர்களை மட்டுமே அவர்கள் உறுதி செய்துகொண்டனர்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் சிங்கப்பூரிலிருந்து தப்பி ஓடினர்.

அவர்களுக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிக்க கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அனைத்துலகக் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அந்த இருவரும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குத் திரும்பியதாகக் காவல்துறை தெரிவித்தது. இதற்குச் சீனக் காவல்துறை உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் சிங்கப்பூர் திரும்பிய அதே நாளன்று வர்த்தக விவகாரத் துறையால் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மோசடி செய்யும் நோக்குடன் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்