மானபங்கம்: ஆடவர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும்

1 mins read
1e1afae7-0a2f-4503-8cb3-33acc2195487
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிறுமியை அந்த ஆடவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது - படம்: இணையம்

பாலர் பள்ளி ஒன்றில் 2 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 59 வயது ஆடவர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாலர் பள்ளி ஊழியரான அந்த ஆடவர்மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.

அவர் தொடர்பான வழக்கு ஜனவரி 24ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க, ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மானபங்கம் தொடர்பாக அந்த ஆடவர்மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் அவை குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

விசாரணை நடத்த கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அந்த ஆடவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.

குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவர் ஒரு மாதத்துக்கும் மேலாக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிறுமியை அவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்