துணைப் பிரதமர் வோங்: சமய நல்லிணக்கம் தானாக வரவில்லை

துணைப் பிரதமர் வோங்: சமய நல்லிணக்கம் தானாக வரவில்லை

2 mins read
dd268059-b044-461e-ab90-280273c1463e
அனைத்துச் சமய மன்றத்தின் 75வது ஆண்டு விழாவில் துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு நாட்டில் பல்வேறு சமயத்தினருக்கு இடையே நல்லிணக்கமான சூழல் நிலவுவது ஆச்சரியமானது. விலை மதிப்பில்லாதது.

இந்த நல்லிணக்கம் சிங்கப்பூரில் தானாக வந்துவிடவில்லை. பல ஆண்டுகள் சிரமப்பட்டு உருவாக்கப்பட்டது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

உலகின் மற்ற இடங்களில் சகிப்புத்தன்மையற்ற தீவிரவாதம் அதிகரித்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதற்காக தலைமுறை தலைமுறையாக வழிகாட்டிய சமய மன்றத் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் கடின உழைப்பால் சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு இன்று சிங்கப்பூரில் நிலவுகிறது,” என்றார் அவர்.

செவ்வாழ்க்கிழமை (ஜனவரி 23) அன்று அனைத்துச் சமய மன்றத்தின் (ஐஆர்ஒ) 75வது ஆண்டு விழாவில் பேசிய அவர், சிங்கப்பூரின் பல்வேறு சமூகத்தினரிடையே நிலவும் நம்பிக்கையைக் கட்டிக்காக்க தொடர்ந்து கவனமும் கவனிப்பும் செலுத்துவது அவசியம் என்று சொன்னார்.

“சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட சமய நம்பிக்கையை அடைந்துவிட்டோம் என்று ஒரு போதும் சிங்கப்பூரர்கள் கருதக்கூடாது. தற்போதைய பதற்றமான புவிசார் அரசியல் சூழ்நிலையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், சமய, இனத்தின் அடிப்படையில் மக்கள் தங்களை குறுகிய வட்டத்துக்குள் அடையாளப்படுத்திக் கொள்வது அதிகரித்துள்ளது.

“இத்தகைய போக்கு வெளிநாடுகளில் காணப்படுகிறது. இது, தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினர் சார்ந்த அரசியல் கட்சிகளின் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.

“மேலும் உலகளாவிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“நாட்டின் தலைவராக நமது சமூகத்தை ஒன்றாக வைத்திருப்பது என்பது எனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதுவும் நம்மை பிரிக்க முயலும் சக்திகளுக்கு இடையே சிங்கப்பூரை வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருப்பது முக்கியம்,” என்று திரு வோங் கூறினார்.

ராஃபிள்ஸ் டவுன் கிளப் மன்றத்தில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் அனைத்துச் சமய மன்றத்தின் புரவலர்கள், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் உட்பட 120க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர்.

தமது உரையின் முடிவில் நன்னம்பிக்கை குழுக்கள், முன்னோடிகள், தலைவர்களுக்கு துணைப் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
சமயம்சிங்கப்பூர்

தொடர்புடைய செய்திகள்