வண்ணமயத்துடன் களைகட்டியது தைப்பூசம் 2024

வண்ணமயத்துடன் களைகட்டியது தைப்பூசம் 2024

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jan 2024 - 11:02 am

2 mins read

இரவு நீடித்த தொடர் மழையையும் பாராது, தைப்பூச ஊர்வலத்தில் இணைந்தனர் பல்லாயிரம் பக்தர்கள். வாரநாள் ஆயினும், பள்ளி மாணவர்கள், பணிபுரிவோர் எனப் பலதரப்பட்டோரும் தங்களின் காணிக்கைகளைச் செலுத்தினர்.

பல்லினத்தோரும் தங்களின் சக ஊழியர்களுக்காக, நண்பர்களுக்காக வருகை புரிந்து முன்னேற்பாடுகளிலும் பாத ஊர்வலத்திலும் ஆதரவளித்தனர். ஜெர்மனி முதலிய அயல்நாடுகளிலிருந்து வந்த சுற்றுப்பயணிகளும் தைப்பூச கோலாகலத்தைக் கண்டு பிரமித்தனர்.

ஜனவரி 24ஆம் தேதி இரவு 11.30மணி முதல் பால்குடங்களையும் பல்வேறு வகை காவடிகளையும் ஏந்திய பக்தர்கள் ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்படத் தொடங்கினர். ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் முன்புறத்தில் மழையிலிருந்து காக்கும் கொட்டகை அமைக்கப்பட்டு பூசை, அலகுக் குத்துதல் முதலிய ஆயத்த நடவடிக்கைகள் பரபரப்பாக நடந்தேறின. முன்பதிவு செய்த பக்தர்கள் 12,000 பேர் திருவிழாவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஆலய, ஊர்வல ஆயத்தங்கள் மேலும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 23 தண்ணீர் பந்தல்கள், அவசர மருத்துவ சேவை, ஶ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு அருகாமையில் அன்னதான கொட்டகை என பல்வேறு வசதிகள் தயாராகி உள்ளன. இவை இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் இரு கோயில் நிர்வாகங்களின் பல மாதக்கால உழைப்பில் விளைந்தவை.

இவ்வாண்டு மூன்றிலிருந்து ஐந்தாக உயர்ந்துள்ள நேரடி இசைக் கூடங்கள் தொடர்ந்து பாரம்பரிய இசை முழங்கின. ஒவ்வொரு இசைக்குழுவும் நான்கு இசைக்கருவிகளை வாசிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிநெடுக ஆரவாரமான இசை அளித்தவாறு, உறுமி, மேளம், டோல் முதலிய தாளக்கருவிகள் ஓங்கி ஒலித்தவாறு தைப்பூச ஊர்வலம் களைகட்டியது.

குறிப்புச் சொற்கள்