கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
764d45fa-4876-4c6b-b2af-bdd45f5b1790
22 வயது காவல்துறை அதிகாரியின் வலது கையிலும் இடுப்பிலும் 49 வயது ஹரிதாஸ் ரயன் பீட்டர் உதைத்ததாகக் கூறப்படுகிறது. - படம்: இணையம்

தன்னைக் கைது செய்ய வந்த காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

22 வயது காவல்துறை அதிகாரியின் வலது கையிலும் இடுப்பிலும் 49 வயது ஹரிதாஸ் ரயன் பீட்டர் உதைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஜனவரி 23ஆம் தேதி செம்பவாங் டிரைவ்வில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது.

அதே நாளன்று, இரவு 9.15 மணி அளவில் புளோக் 462 செம்பவாங் டிரைவ்வில் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்தபோது பூட்டிய வீட்டில் ஹரிதாஸ் தமது 52 வயது காதலியுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹரிதாஸ் அவருக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று கருதப்பட்டதால் நெருக்கடிநிலை பேச்சுவார்த்தைப் பிரிவு, சிறப்பு நடவடிக்கைப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.

“நெருக்கடிநிலை பேச்சுவார்த்தைப் பிரிவு அதிகாரிகள் ஹரிதாசிடம் பேசிப் பார்த்தனர். அப்போது அவரது காதலி கழிவறைக்குச் சென்றதை அதிகாரிகள் கவனித்தனர். அப்பெண்ணின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர்,” என்று காவல்துறை தெரிவித்தது.

அதிகாரிகள் வீட்டுக்குள் எவ்வாறு நுழைந்தனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஹரிதாஸ் கைது செய்யப்பட்டபோது காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியரைத் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமோ பிரம்படியோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்