நண்பர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நண்பர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

1 mins read
2331f343-eec0-43b0-9ebe-3ee6d43ffbab
நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்மீது கொதிக்கும் சூப்பை ஊற்றிய பெண் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரு மார்ட்டின் போயே என்ற 26 வயது ஆடவருக்கு வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை லிம் ஸி ஹுவி, 33, ஜனவரி 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

மேலும், திரு மார்ட்டின் போயேவை அறைந்ததற்கும் கூடுதலான குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரின்செப் தெருவில் உள்ள எஃப்எம்எல் மதுக்கூடத்தில்  ஏப்ரல் 19, 2022ல் லிமுக்கும்  திரு போயேக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், லிம்மின் கைத்தொலைபேசி சேதமடைந்தது. 

அதனையடுத்து, லிம் கோபத்தில் திரு போயேவை அறைந்தார். 

அதற்குப் பிறகு, திரு போயே தன்  நண்பர்களுடன் அருகில் இருந்த உணவகத்தில் இரவுணவு உண்ணச் சென்றார். 

அங்கு சென்ற லிம், திரு போயேவின் உணவு மேசையில் இருந்த கொதிக்கும் சூப்பை அவர்மீது கவிழ்த்ததாகக் கூறப்பட்டது.

இதன் விளைவாக, திரு போயேக்குக் கடுமையான வலி ஏற்பட்டு சிறிது நேரம் சுயநினைவை இழந்தார் என்றும் அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.  

அவரது உடலின்,  31 விழுக்காட்டுப் பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால்,  அவருக்குத் தோல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டது.

வேண்டுமென்றே கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமோ பிரம்படியோவிதிக்கப்படலாம். 

இருப்பினும், லிம் பெண் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

குறிப்புச் சொற்கள்