குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் தோக்கியோ செல்ல அனுமதி

குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் தோக்கியோ செல்ல அனுமதி

1 mins read
2b11b5b5-73b1-419d-9e01-e7c187b2d5aa
ஜனவரி 24ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையான கில்பெர்ட் ஓ ஹின் குவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தூதரக சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் ஒருவர், ஓய்வுக்காக மூன்று வாரம் தோக்கியோ செல்ல மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2023 நவம்பர் 23ஆம் தேதி கில்பெர்ட் ஓ ஹின் குவான், 45, மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

வெளியுறவு அமைச்சை ஏமாற்றியது, பொதுச் சேவை ஊழியரிடம் தவறான தகவல் அளித்தது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

2022 டிசம்பரில் சிங்கப்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு தூதரகப் பை சேவை மூலம் பெனடால் பெட்டிகள் அடங்கிய பொட்டலத்தைத் தனது சக ஊழியரான திரு டியோன் லோக் செங் வாங்குக்குப் பதிலாக தனிப்பட்ட ஒருவருக்கு அனுப்பப்பட்டது குறித்து சிங்கப்பூரரான அவர் அமைச்சிடம் மறைத்ததாகக் கூறப்படுகிறது.

2023 ஜனவரி 12ல் அமைச்சை ஏமாற்ற லோக்குக்கு அவர் உடந்தையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

2023 ஜனவரி 19ஆம் தேதி வெளியுறவு அமைச்சின் அப்போதைய துணைச் செயலாளர் ஓங் எங் சுவானிடம் லோக் எடுத்துச்சென்ற ஆடம்பரக் கைக்கடிகாரம் குறித்து அவர் பொய் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கைக்கடிகாரங்கள் ஓவின் தந்தைக்குச் சொந்தமானவை என்று தெரிவிக்கப்பட்டது.

ஓ மீதான வழக்கு ஜனவரி 25ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனவரி 28 முதல் பிப்ரவரி 20 வரை ஓய்வுக்கு தோக்கியோ செல்ல அனுமதிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குறிப்புச் சொற்கள்