நம்மிலிருந்து மாறுபட்டு இருப்பவர்கள்மீது காட்டப்படும் வெறுப்புணர்வை சமுதாயம் ஒன்றிணைந்து போக்குவது முக்கியம் என்று உள்துறை இணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் வியாழக்கிழமை (ஜனவரி 25) கூறினார்.
மலாய், முஸ்லிம் மறுசீரமைப்புக் கட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே ஊடகங்களிடம் பேசிய அமைச்சரிடம் 16 வயது ஆடவர் சுய தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டது குறித்துக் கேட்கப்பட்டது.
அந்த ஆடவர் தன்னை உயர்நிலை வெள்ளை இனத்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். அவருக்கு உள்துறை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை 4ஆம் வகுப்பு மாணவரான அந்த ஆடவர் தீவிர வலதுசாரி சித்தாந்தப் பிரசாரத்தினால் தீவிரவாதியாக மாறியிருந்தார். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வலதுசாரி தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்ட, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், அரேபியர்கள் உள்பட, ஓரினக் காதலர்கள், கலப்பினக் காதலர்கள், மூன்றம் பாலினத்தவர் போன்றவர்கள் மீது அந்த ஆடவர் கடும் வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
வெள்ளை இனத்தவரே உயர்வானர்கள் என எண்ணும் தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகரான பால் நிக்கலஸ் மில்லர் என்பவரின் வன்முறை கலந்த தீவிரவாதச் சிந்தனையை போதிக்கும் காணொளிகளை 2022ஆம் ஆண்டு முதல் அந்த ஆடவர் பார்த்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மீட்சித் திட்டங்கள் போன்றவை உள்ளபோதிலும், சிங்கப்பூர் சமுதாயம் இன்னமும், இணையம் அல்லது சமூக ஊடகம் வாயிலாக வெளிநாட்டு நடப்புகளுக்கு ஆட்படுகின்றனர் என்று பேராசிரியர் ஃபைஷல் சொன்னார்.
“இப்பொழுது எது முக்கியம் என்றால், சமுதாயம், குடும்பங்கள், பெற்றோர் என அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆக்ககரமான, கருணையுடன் கூடிய, ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் வாழ்வை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதும், தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய தீவிரவாதம் தொடர்பான அம்சங்களிலிருந்து எவ்வாறு விலகியிருப்பது என்பதும்தான்,” என்று பேராசிரியர் ஃபைஷல் விளக்கினார்.


