துவாசில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். அந்த ஆடவருக்கு வயது 51.
ஜனவரி 24ஆம் தேதி துவாஸ் சவுத் அவென்யூ 3லிருந்து ஜாலான் அகமது இப்ராகிமை நோக்கிச் செல்லும் பாதையில் நிகழ்ந்த விபத்து குறித்துக் காலை 7.45 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
மோட்டார்சைக்கிள் வழுக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை கூறியது.
‘சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடண்ட்’ என்ற ஃபேஸ்புக் குழு வெளியிட்ட காணொளியில் சாலையோரமாக நீலநிறக் கூடாரம் போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அருகில் மோட்டார்சைக்கிள் ஒன்று விழுந்துகிடந்தது.
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

