‘ஈசி-லிங்க், நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகள் குறைந்தது 2030 வரை பயன்பாட்டில் இருக்கும்’

2 mins read
45f28fe9-b24e-4f2c-a5ce-a48ce5161ce9
ஈசி-லிங்க், நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்தும் முறையை 2030ஆம் ஆண்டுக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் பிறகு முடிவெடுப்பர் என்றார் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிம்ப்ளிகோ அம்சம் இல்லாத பெரியோருக்கான ஈசி-லிங்க் அட்டைகளையும் நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளையும் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதற்காகக் குறைந்தது 2030ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

இந்த அட்டைகளை அடிப்படையாகக் கொண்ட பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்தும் முறையைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க புதிய சாதனங்களை வாங்க வேண்டும் என்று திரு சீ கூறினார்.

அவற்றை வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் தோராயமாக $40 மில்லியன் தேவைப்படும் என்று ஜனவரி 26ஆம் தேதியன்று அவர் தெரிவித்தார்.

இதற்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என்றார் அவர்.

இதனால் பேருந்து, ரயில் கட்டணங்கள் பாதிக்கப்படாது என்று அலெக்சாண்டிரா சாலையில் உள்ள போக்குவரத்து அமைச்சின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சீ தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டு வரை மட்டுமே இந்த அட்டைகளைப் பயன்படுத்தும் முறையை நீட்டித்திருப்பதற்கான காரணம் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் சீ, “அனைத்துத் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. அந்த ஆயுட்காலம் முடிந்ததும் கட்டமைப்பைப் புதுப்பித்து புதிய சாதனங்களை வாங்குவதா அல்லது இயக்கமுறையை மேம்படுத்துவதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று கூறினார்.

அட்டைகளைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்தும் முறையை 2030ஆம் ஆண்டுக்குப் பிறகும் நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் பிறகு முடிவெடுப்பர் என்றார் அமைச்சர் சீ.

தற்போது சிம்ப்ளிகோ தளத்தைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்தும்போது கழிக்கப்படும் தொகையைப் பார்க்க முடியாது.

இதற்குத் தீர்வு காண முடியுமா என்பதைப் பொறுத்தே அட்டைகளைப் பயன்படுத்தும் முறையை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சீ கூறினார்.

இதுதொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்பு பயணிகள், துறை நிபுணர்கள் ஆகியோரின் கருத்துகளை அதிகாரிகள் நாடுவர் என்றார் அவர்.

ஆனால் சிம்ப்ளிகோ தளம் போன்று வங்கிக் கணக்கு அடிப்படையில் இயக்கப்படும் கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தும்போது, கழிக்கப்படும் தொகையைப் பார்க்க முடியாமல் போகும் பிரச்சினைக்கு சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் தீர்வுகாணும் தொழில்நுட்பம் தற்போதைக்கு நடப்பில் இல்லை என்று ஜனவரி 18ஆம் தேதியன்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட திரு சீ வலியுறுத்தினார்.

ஆனால் இதற்குத் தீர்வு காணும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் பிற அரசாங்க அமைப்புகளுடனும் தொழில்துறை பங்காளிகளுடனும் இணைந்து செயல்படும் என்றார் அவர்.

“இதன் தொடர்பிலான அமைப்புகள்,பெரியோருக்கான பழைய போக்குவரத்துக் கட்டண அட்டைகளை படிப்படியாக அகற்றலாம் என்று முடிவெடுத்தது ஒரு தவறான மதிப்பீடு. மேலும் கட்டண அட்டையில் உள்ள எஞ்சிய தொகையைப் பயணிகள் தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்புவதும் குறைத்து மதிப்பிடப்பட்டது. இதற்காக நான் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அமைச்சர் சீ தெரிவித்தார்.

அட்டை அடிப்படையிலான முறையை குறைந்தது 2030ஆண்டுவரை பயன்பாட்டில் வைத்திருக்க அரசாங்கம் $40 மில்லியன் செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்