தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிளார்க் கீயில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக பொறியாளர் மீது குற்றச்சாட்டு

2 mins read
0597988a-96c5-4d61-a30c-ac5a75002643
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிளார்க் கீயில் 29 வயது பெண்ணை மானபங்கப்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வுக் கழகத்தின் (ஏ*ஸ்டார்) மூத்த ஆய்வுப் பொறியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு வோங் டாவுங்கே எனும் அந்தப் பொறியாளர் மானபங்கக் குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

“எங்கள் அதிகாரிகள் மிக உயர்ந்த அளவிலான ஒழுக்கத்தையும் நம்பகத்தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்,” என்று ஏ*ஸ்டார் அமைப்பு ஜனவரி 26ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியது.

குற்றம் சாட்டப்பட்ட அந்த சிங்கப்பூரர் மீதான வழக்கு விசாரணை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு சம்பவங்களின் தொடர்பில் ஜனவரி 23ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்ட 10 ஆடவர்களில் திரு வோங்கும் ஒருவர். அவர்களில் மூவர் மரினா மே சேண்ட்சில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

2023 அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு, 41 வயது அல் அமின் எனும் ஆடவர், சி லா வி கிளப்பில் 27 வயது பெண்ணை மானபங்கப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுள்ளது.

2023 நவம்பர் 25ஆம் தேதி காலை 5.20 மணிக்கு, ஜெப்தா கோ போ காங் எனும் ஆடவர், மார்கீ சிங்கப்பூர் இரவு விடுதியில், 25 வயது பெண்ணை மானபங்கப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

2024 ஜனவரி 1ஆம் தேதியன்று, 30 வயது ஜூலை ஐஸாக் எனும் ஆடவர், அவென்யூ சிங்கப்பூர் எனும் மதுபானக் கூடத்தில் 31 வயது பெண்ணை மானபங்கப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆடவர் அனைவரது வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இரவு விடுதிகளில் மானபங்கச் சம்பவங்களும் கைகலப்புகளும் அதிகமாக நடைபெற்று வருவதால், 2024ஆம் ஆண்டு ‘பாதுகாப்பான இரவுவிடுதி இயக்கம்’ மீண்டும் நடப்புக்கு வந்துள்ளது.

இதன் மூலம், மதுபோதையில் உள்ள வாடிக்கையாளர்கள் தொடர்பான சம்பவங்களை எப்படி பாதுகாப்பாகக் கையாளலாம் என்பதில் பொதுக் கேளிக்கை விடுதிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இரவு விடுதிகளில் 106 மானபங்கச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் முன்னதாகக் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்