ரிவர் வேலி விபத்தில் 4 வயது சிறுமி மரணம்

3 mins read
45d051a9-4bb7-4b46-91cf-4d2843c5150f
ஜனவரி 23ஆம் தேதி சாலை விபத்தில் காயமுற்ற ஸாரா மெய் ஒர்லிக் மருத்துவமனையில் காலமானார். - படம்: நிக் ஒர்லிக்

புத்தாண்டு அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நான்கு வயது ஸாரா மெய், கடந்த டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது பனிச்சறுக்குப் பயணம் சென்று வந்தார். ஆனால் அவரது வாழ்க்கைப் பயணம் ஜனவரி 23ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு நிகழ்ந்த ஒரு விபத்து காரணமாக குறை ஆயுளில் முடிந்தது.

பாலர் பள்ளியிலிருந்து தனது இரண்டு வயது தங்கையுடனும் பணிப்பெண் லில்லியுடனும் தங்கள் ரிவர் வேலி இல்லம் நோக்கி சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்கு அருகே ஒரு கார் அவர் மீது மோதியது.

பணிப்பெண், இளைய பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டும் அவர்களின் பள்ளிப் பைகளைத் தோளில் போட்டுக்கொண்டும் நடந்துசென்று, சாலை கடக்கும் இடத்தில் நின்றார். பாதசாரிகள் கடக்கலாம் என்று கூறும் பச்சை மனிதன் சமிக்ஞை வந்ததும் ஸாராவைச் சாலையைக் கடக்கச் சென்னார் லில்லி என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் விவரித்தார் ஸாராவின் தந்தையான நிக் ஒர்லிக். அந்தச் சமயத்தில் ஸாராவின் ஆறு வயது அக்கா அங்கில்லை.

நன்யாங் வர்த்தகப் பள்ளியில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் ஒர்லிக், “ஸாரா மிகவும் கவனமான சிறுமி. சாலையைக் கடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க நாங்கள் அவளுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறோம்,” என்றார்.

“பொதுவாக அந்தச் சாலையில் அதிக போக்குவரத்து இருக்காது. இருப்பினும், அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்துவதும், வாகனங்கள் வேகமாக செல்வதும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது,” என்றும் 39 வயது டாக்டர் ஒர்லிக் கூறினார்.

“கார் மோதிய பிறகு, ஸாராவைத் தடுத்து நிறுத்த என்னால் முடியவில்லை. காரை நிறுத்தும்படி நான் வாகன ஓட்டுநரிடம் கத்தினேன். ஆனால் அவர் உடனே நிறுத்தாமல் சிறிது நேரம் கழித்துதான் நிறுத்தினார்,” என்றார் 30 வயதுகளில் உள்ள லில்லி.

விபத்து நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டில் பிள்ளைகளுக்காகக் காத்திருந்தார் டாக்டர் ஒர்லிக். பணிப்பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்தார் அந்தத் தந்தை.

“நான் என் மகளைப் பார்த்தபோது, என் இதயம் நொறுங்கியது. அவளது தலையில் பலத்த அடி பட்டிருந்தது. மூக்கு, வாய், தலை ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொட்டியது. அவளது கண்கள் மூடியிருந்தன,” என்றார் தந்தை.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ வாகனம் மூலம் ஸாரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று தந்தையிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஸாராவுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் ஸாராவின் தாயாரான 38 வயது பிரிட்டிஷ் வழக்கறிஞர் மிஷெல் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தார். உயிருக்குப் போராடும் மகளைப் பார்த்து கதறி அழுதார்.

பின்னர் மகளின் நிலைமையைக் கிரகித்துக்கொண்ட பெற்றோர் இருவரும், இதய இயக்க மீட்பு சிகிச்சையை நிறுத்த மருத்துவர்களைக் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.

வாகனத்தைக் கவனக்குறைவாக ஓட்டிய சந்தேகத்தின் பேரில் விபத்தில் சம்பந்தப்பட்ட காரின் ஒட்டுநரான 40 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்