தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய கிழக்கு போர் எதிரொலி; அமெரிக்காவில் முஸ்லிம், பாலஸ்தீன எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
cb638a8a-294d-4531-8694-65e461344a5d
கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி வாஷிங்டனில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இஸ்ரேல்-காஸா போரால் அமெரிக்காவில் முஸ்லிம்கள், பாலஸ்தீனத்துக்கு எதிரான சம்பவங்கள், வெறுப்பு பற்றிய புகார்கள் 180 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அமெரிக்க-இஸ்லாமிய உறவுக்கான மன்றம் (சிஏஐஆர்) தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதற்குப் பதிலடியாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்தை இஸ்ரேல் சூறையாடி வருகிறது.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் போர் மூண்டதிலிருந்து அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் இஸ்லாமிய வெறுப்பு, பாலஸ்தீன எதிர்ப்பு கூடியுள்ளதாக மன்றம் குறிப்பிட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வெறுப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் வெர்மோன்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சுடப்பட்டனர்.

சென்ற அக்டோபரில் இல்லினாய்சில் ஆறு வயதே ஆன பாலஸ்தீனிய அமெரிக்கக் குழந்தை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது.

2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இது தொடர்பாக 3,578 புகார்களைப் பெற்றதாக மன்றம் கூறியது.

இது, முஸ்லிம் எதிர்ப்பு, பாலஸ்தீனத்திற்கு எதிரான வெறுப்பு அலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என்றது அது.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வந்த புகார்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 178% அதிகமாகும்.

வேலைவாய்ப்புப் பாகுபாடு பற்றிய புகார்கள் 662 சம்பவங்களுடன் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கின்றன.

வெறுப்பு தொடர்பான குற்றச்செயல்கள் மற்றும் வெறுப்புச் சம்பவங்கள் 472 முறை பதிவாகியுள்ளன. கல்வியில் பாகுபாடு 448 முறை நடந்துள்ளது என்று மன்றம் மேலும் தெரிவித்தது.

அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு மூன்று மாதங்களில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அமெரிக்க யூத எதிர்ப்பு சம்பவங்களும் 360 விழுக்காட்டுக்கு அதிகரித்தது என்று இந்த மாதத் தொடக்கத்தில் அவதூறு எதிர்ப்பு அமைப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்