பழங்களால் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய கலைப்படைப்பு

மேரிமவுண்ட் சமூக மன்றத்தில், அப்பகுதி மக்கள் இணைந்து 30 வகைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 10,000 பழங்களைக் கொண்டு, பழங்களால் பெரிய ரங்கோலியை உருவாக்கி, சாதனை படைத்தனர்.

தைப்பொங்கல் 2024ஐ முன்னிட்டு அவர்கள் செய்த 24X24 அடியில் செய்த இந்த கலைப்படைப்பு, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

மேரிமவுண்ட் சமூக மன்றம் இவ்வாண்டின் பொங்கல் விழாவை கடந்த ஜனவரி 28ஆம் நாள் கொண்டாடியது. இந்நிகழ்வில் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கடைசி எட்டு ஆரஞ்சுப் பழங்களை வைத்து இந்தப் படைப்பை முடித்து வைத்தார் அவர். அத்துடன், மக்களுடன் கலந்துரையாடிய அவர், அங்குள்ள பெண்கள் பயிற்றுவிக்க, கோலாட்டம் ஆடியும் மகிழ்ந்தார்.

மேரிமவுண்ட் வட்டார மக்களுடன் சிறப்பு விருந்தினர் கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங். படம்: லாவண்யா வீரராகவன்

பொங்கல் வழிபாடு, கிராமப் பொங்கல் கொண்டாட்டங்களை கண்முன் நிறுத்திய சிற்றுரு (மினியேச்சர்), பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அறுசுவை உணவு உள்ளிட்டவற்றுடன் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் 70 வெளிநாட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. டெங்கி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதுகுறித்த வினாடி வினா நடத்தப்பட்டது. சரியான விடை கூறியோருக்கு அன்பளிப்புப் பை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து மேரிமவுண்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் விஜயேந்திரன், 65, கூறுகையில், “இதனை ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கும் மேலாகத் திட்டமிட்டோம். நம் சமூக மன்றம் தனித்துத் தெரியும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென்கிற ஊக்கத்தில் பிறந்ததுதான் இந்தப் பழ ரங்கோலி,” என்றார்.

முதலில் வரைபடம் தயாரித்து, அதனை சிங்கப்பூர் சாதனைப் புத்தகக் குழுவுக்கு அனுப்பி வைத்து, அதனை சரியாகச் செயல்படுத்தியதை அடுத்து, இந்த அங்கீகாரம் தங்களுக்கு கிட்டியதாகத் திரு விஜயேந்திரன் குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு விழா உணர்வை ஏற்படுத்தவும், அவர்களை உள்ளடக்கியதுதான் இச்சமூகம் என உணர்த்தும் வகையிலும், வெளிநாட்டு ஊழியர்களை அழைத்ததாக தெரிவித்தார் விஜயேந்திரன்.

துணைத்தலைவர் ரமேஷ் சுப்புராமன், 63 கூறுகையில், “இருபதுக்கும் மேற்பட்டோர் இதில் உழைப்பைச் சிந்தியுள்ளனர். பெண்களும் நேரம் பார்க்காமல், சிறு இடைவேளை மட்டுமே எடுத்துக்கொண்டு இதனைச் சாதித்துக் காட்டியுள்ளனர்,” என்றார்.

இந்த வடிவமைப்புக்கு பங்காற்றிய திரு கோவிந்தராஜ் ஜெகதீசன், 40, அனைவரும் இணைந்து செயல்பட்டு நினைத்தபடி இதனை முடித்தது நிம்மதியாக இருப்பதாகச் சொன்னார்.

அப்பகுதியில் 32 ஆண்டுகளாக வசிக்கும் திருவாட்டி பாக்கியம், 63, “இது சிறப்பான பொங்கல் விழாவாக அமைந்துள்ளது. இங்கு வந்து பங்காற்றும் பலரைக் காணும்போது மகிழ்வாக உள்ளது,” என்றார்.

“இன வேறுபாடின்றி இப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து இந்த பொங்கல் கொண்டாடியதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. அதிலும், இந்தக் கலைப் படைப்பை உருவாக்கியது மேலும் பெருமை,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திருவாட்டி சுமலதா, 40.

இந்நிகழ்வில் பங்கேற்று கலைப் படைப்பில் பங்காற்றியதோடு, கோலாட்டமும் ஆடிய திருவாட்டி சிந்தியா, 43, “இது போன்ற நிகழ்வுகள் அன்றாட வாழ்விலிருந்து ஒரு மாற்ற உணர்வைத் தருகிறது. சோம்பலாக கழியும் பொதுவான ஞாயிற்றுக்கிழமைபோல இல்லாமல் அனைவரும் சிரித்த முகத்துடன், பாரம்பரிய உடையில், பேசி சிறிது உலா வருவது இன்பமயமாக இருக்கிறது. இது ஒரு சமூகத் தொடர்பு மட்டுமல்லாது, பாரம்பரியத்தை விட்டுவிடாமல் தொடர வேண்டிய உணர்வையும் அடுத்த தலைமுறைக்குச் சொல்லித்தருவதாக அமைகிறது,” என்றார்.

விழா முடிவில், படைப்பில் வைக்கப்பட்ட அனைத்துப் பழங்களும் பங்கேற்ற அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!