‘உரிமம் பெற்ற இடங்களில்செல்லப்பிராணிகளை தங்க வைக்கவும்’

1 mins read
b040904c-20c1-4f74-89ae-68d205ec8d93
மூச்சு, இதயத்துடிப்பு இல்லாமல் இருந்த ‘மிசோ’ இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: மிசோதெஸ் / இன்ஸ்டகிராம்

செல்லப் பிராணிகளை உரிமம் பெற்ற இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உரிமம் இல்லாத தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்ட நாய் ஒன்று இறந்ததைத் தொடர்ந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளக்கம் கேட்டது. இதையடுத்து அந்த ஆலோசனைக் குறிப்பை விலங்குநல மருத்துவச் சேவை வெளியிட்டது.

‘மிசோ’ எனும் நான்கு வயது நாய் ஜனவரி 2ஆம் தேதி இறந்தது.

சிராங்கூன் கார்டன்ஸில் உள்ள உரிமம் பெறாத இடத்தில் ‘மிசோ’ தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த பராமரிப்பு நிலையத்தின் பெயரை மிசோவின் உரிமையாளர்கள் வெளியிடவில்லை.

திருமதி ஜெஸ்ஸிகாவும் அவரது கணவர் ஸ்டீவன் புவாவும் 2023 டிசம்பர் 27ஆம் தேதி நாயை தங்குமிடத்தில் தங்க வைத்துவிட்டு தைவான் விடுமுறையை முடித்துகொண்டு ஜனவரி 5ஆம் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஜனவரி 2ஆம் தேதி தங்குமிடத்திலிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது.

அப்போது நாய் இறந்துவிட்டதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அசைவற்றுக் கிடந்த மிசோவை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இதயத்துடிப்பும் சுவாசமும் இல்லை என்று கால்நடை மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விலங்குநல மருத்துவச் சேவை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்